×

அறவழி போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தாருங்கள்

புதுச்சேரி, பிப். 14: புதுவையிலிருந்து கவர்னர் கிரண்பேடி வெளியேற கோரி நடந்துவரும்  அறவழி போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தரும்படி பொதுமக்களுக்கு முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை நிறைவேற்ற சொன்னால், கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளை மிரட்டி, மக்கள் நலத்திட்டங்களை வேண்டுமென்றே தடுக்கிறார். உதாரணத்திற்கு 20 கிலோ இலவச அரிசி கொடுக்கும் திட்டத்தை தடுத்துவிட்டார். கடந்த 3 வருடங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத ஒரு சூழலை வேண்டுமென்றே உருவாக்கியுள்ளார். மக்கள் நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்த மத்திய அரசு கவர்னருக்கு ரீடெலிகேஷன் அதாவது நிதியை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொன்ன விஷயத்தை மறுக்கிறார். உதாரணத்திற்கு அமைச்சரவைக்கு ரூ.100 கோடி வரை திட்டங்களை அனுமதிப்பதற்கான உத்தரவை மத்திய அரசு கொடுத்தால், இதனை நான் கொடுக்க மாட்டேன், எல்லா கோப்புகளும் என் இடத்தில்தான் வர வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.

அதனால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மாத கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. கவர்னர் கிரண்பேடி தன்னிடத்தில் மட்டும்தான் அதிகாரம் இருக்க வேண்டும் என பெரிய அதிகார போதையில் உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கும், முதல்வருக்கும், எம்எல்ஏக்களுக்கும் எவ்வித மரியாதையும் வரக்கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட அரசியல் விரோத, மக்கள் விரோத முடிவெடுக்கிறார். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை தடுப்பதற்கான எல்லா முயற்சியையும் இதுவரை எடுத்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகைக்கான துணி மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கான பொங்கல் பரிசு ஆகிய திட்டங்களை தடுத்து நிறுத்தியுள்ளார். பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கியிருந்தாலும் கவர்னர் தலையிட்டு, அவர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என கூறுகிறார். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சம்பளம் கிடைக்காமல் கடன் வாங்கி, மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். காவல்துறை அதிகாரிகளை அழைத்து ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் போட வேண்டும் என்று உத்தரவிட்டு ஒரே நாளில் 16 ஆயிரம் மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிட்டார்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்பு ஹெல்மெட் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தும் என்று சொன்னால் கூட, தானே இறங்கி அனைவரையும் மிரட்டுகின்ற அநாகரீகமான செயலை கவர்னர் செய்கிறார். ஆனால், இரவு நேரங்களில் கவர்னர் ஹெல்மெட் போடாமல் போன காட்சிகளை மக்கள் இன்றைக்கும் பார்த்து கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி திட்டங்களுக்கும் தடையாக கவர்னர் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பல இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்துவதற்கு பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுசேர்ந்து புதுவையிலிருந்து கவர்னர் கிரண்பேடியை ெவளியேற்ற வேண்டும் என்று வற்புறுத்துகின்ற ஒரு நிலையை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். எனே மக்கள் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை நிபந்தனையின்றி நிறைவேற்ற அனுமதி கோரி கடந்த 7ம்தேதி கவர்னர் கிரண்பேடிக்கு முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அதன்பிறகும் கவர்னர் அனுமதியளிக்கவில்லை. எனவே கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து வெளியேற கோரி நாங்கள் அறவழி போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிறோம். இந்த அறவழி போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...