×

பாலம் கட்டும் பணி தீவிரம்

சின்னசேலம், பிப். 14: சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில் பாதைகளுக்கு இடையே பாலம் கட்டுதல் மற்றும் ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில்பாதை அமைக்கும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு பின் வந்த அரசு அதற்கான நிலத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதற்கு பின் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்ட மதிப்பீடான ரூ.170 கோடியில் மத்திய அரசும், மாநில அரசும் பங்கீடு செய்து திட்டத்தை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்டத்தில் இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கிடையில் என 2 பெரிய பாலங்கள், 23 சிறிய பாலங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு, மயூரா நதியின் குறுக்கே பெரிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 23 சிறு பாலத்தில் 10 பாலங்கள் இதுவரை கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. மீதி உள்ள பாலங்கள் கட்ட போதிய வழித்தடங்கள் இல்லாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ரயில் பாதைக்கான வழித்தடம் அமைக்க கையகப்படுத்திய நிலங்களுக்கு அதாவது விவசாயிகளுக்கு கொடுக்க ரூ.10 கோடியை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அந்த நிதியை விவசாயிகள் பெற்றுக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிகிறது. சிலர் மாவட்ட நிர்வாகம் நடத்தும் கூட்டத்திற்கும் போகவில்லை என தெரிகிறது. அதனால் ரயில்பாதை அமைக்கும் பணியில் தடை உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் சின்னசேலம் ரயில் நிலையம் அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சரளை மண் கொட்டி ரயில் பாதையின் அடித்தளம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும், சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகமும் தீவிர கவனம் செலுத்தினால் இன்னும் ஒரு வருடத்தில் சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில்பாதை முடிவடையும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை