×

சைதாப்பேட்டை குடிசைமாற்று வாரிய பகுதியில் நியாய விலைக்கடை அமைக்க வேண்டும்: சட்ட பேரவையில் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை, பிப். 14: சைதாப்பேட்டை குடிசைமாற்று வாரிய பகுதியில் புதிய நியாய விலைக்கடை அமைக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் சட்ட பேரவையில் நேற்று வலியுறுத்தினார். சட்ட பேரவையில் நேற்று  கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
மா.சுப்பிரமணியன் (திமுக எம்எல்ஏ, சைதாப்பேட்டை தொகுதி): சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட 142வது வட்டத்தில் கொத்தவால்சாவடி தெரு மற்றும் குடிசைப்பகுதி, விளாமர குடிசைகள், சாஸ்திரி தெரு போன்ற பல்வேறு  பகுதிகளுக்கு 969 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு நியாய விலை கடை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது. அதே கடையை ஒட்டி இன்னொரு நியாய விலை கடை இருக்கிறது. அந்த கடையில் 963 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அங்கு மக்கள் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. அதனால் அங்குள்ள குடிசைமாற்று வாரிய பகுதியில்  ஒரு புதிய கடை அமைக்க வேண்டும். உணவுத்துறை அமைச்சர் காமராஜ்: சென்னையை பொறுத்தவரை இடம் கிடைப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. அந்த இடத்திற்கு அருகிலேயே நியாய விலைக்கடை அமைப்பதற்கான வேறு இடம் கண்டறியப்பட்டால் அந்த  இடத்தில் புதிய கடையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சைதாப்பேட்டை பகுதியில் ஒரே இடத்தில் 2,000 குடும்ப அட்டைகள் இருப்பதாக உறுப்பினர் சொன்னார். அந்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து, குடிசை பகுதி மாற்று வாரியத்திற்கு  சொந்தமான இடம் இருப்பது தெரிந்தால் அந்த இடத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலை கடை கட்டுவதற்கு ஆவன செய்யப்படும்.மா.சுப்பிரமணியன்: மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை உணவு துறையின் கீழ் நியாய விலை கடைகளுக்கான கட்டிடம் கட்டுவதற்கும், அலுவலகங்களை அமைப்பதற்கும்  மாநகராட்சியில் மட்டுமல்ல, வேறு எந்த துறையில் இடம் இருந்தாலும் அந்த துறைகளிடம் இருந்து இடத்தை கேட்டு பெற்று மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இடம் உணவு துறைக்கு வழங்கப்பட்டது. அதன்படி  இன்றைக்கு சென்னையில் இருக்கின்ற 22 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒரு உணவு பொருள் பங்கீட்டு அலுவலகமும், 200க்கும் மேற்பட்ட புதிய கடைகளுக்கும் அப்போது இடங்கள் வழங்கப்பட்டது. எனவே, சட்டமன்ற  உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி தருவதற்கு தயாராக இருக்கிறோம். அந்த பகுதியில் ஒரு புதிய கடை அமைத்து 969 குடும்ப அட்டைகளை கொண்ட ஒரு புதிய நியாய விலை கடை ஏற்படுத்தி தர  வேண்டும்.அமைச்சர் காமராஜ்: குடிசைமாற்று வாரிய பகுதியிலேயே ஒரு இடத்தை கண்டறிந்து  கடை அமைக்க உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நடந்தது.

Tags : Saidapettai ,cottage ,
× RELATED பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என...