×

நமது எதிர்காலத்தை சமுதாயம் தீர்மானிக்க கூடாது கடலோர காவல்படை கமாண்டர் பேச்சு

காரைக்கால், பிப்.13: நமது எதிர்காலத்தை சமுதாயம் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. நாமே தீர்மானிக்கும் சக்தியாக மாறவேண்டும் என, இந்திய கடலோர காவல்படை கமாண்டர் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
காரைக்கால் வரிச்சிக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கம் சார்பில் வழிகாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர் சந்தனசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பெற்றோர் சங்க தலைவர் வின்சென்ட் பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கடலோர காவல்படை
கமாண்டர் நாகேந்திரன் பேசியது:
இன்றைய உலகம் பல்வேறு போட்டிகள் நிறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு போட்டியும் வெவ்வேறாக உள்ளது. எதையும் சந்திக்கும் வகையில் மாணவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி அளவிலேயே அதற்கான தகுதிகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக எதிர்காலத்தில் நாம் என்னவாக உருவெடுக்க வேண்டும் என்பதை சமுதாயம் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. நாமே தீர்மானிக்கும்
சக்தியாக மாற வேண்டும்.
நம்மால் எதை தேர்வு செய்தால் சாதிக்க முடியும் என்பதை நாம்தான் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். மாணவ பருவத்தில் அனைவரும் படிப்பே பிரதானமாக இருக்க வேண்டும். இது தவிர வேறு எதிலும் கவனத்தை திசை திருப்பக் கூடாது. நமது செயல்கள் அனைத்தும் நேர்மையான முறையில் இருப்பதும், கடினமாக உழைப்பதுமாக இருந்தால் வெற்றி நம்மை தேடிவரும். அனைத்தையும் சாதிக்கும் வல்லமை மாணவர்களாகிய நமது கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கறினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் கூறினார். பெற்றோர் சங்க செயலர் ரவிச்சந்திரன், செய்தி தொடர்பாளர் அன்பரசன் மற்றும் கல்லூரி பேராசிரியர் கலந்து கொண்டனர்.

Tags : Commander ,Coast Guard ,
× RELATED கடலில் வீசப்பட்ட ரூ.5 கோடி தங்கம் மீட்பு