×

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்வுப்பணி ஒதுக்கீடு பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் சி.இ.ஓ.,விடம் முதுநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சேலம், பிப்.13: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு பணி ஒதுக்கீடு பணி மூப்பு அடிப்படையில் செய்ய வேண்டும் என முதுநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தினர். தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதனையடுத்து, தேர்வுப்பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்ைககளில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழககத்தின் சேலம் மாவட்ட தலைவர் முருகன், சிஇஓ கணேஷ்மூர்த்தியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அப்போது, ஆசிரியர்கள் காமராஜ், கனகராஜ், சக்திவேல் மற்றும் மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர். அந்த மனுவில், ‘‘சேலம் மாவட்டத்தில் தேர்வுப்பணி ஒதுக்கீடு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர் பணிக்கு மூத்த முதுநிலை ஆசிரியர்களை பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். இதேபோல், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர் மற்றும் பறக்கும் படை உறுப்பினர் போன்ற இரண்டாம் நிலை தேர்வுப் பணிகளுக்கும், பணிமூப்பு அடிப்படையில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கடந்த ஆண்டு முதுநிலை ஆசிரியர்களுக்கு, 40 கிலோ மீட்டர் தூரம் வரை அறை கண்காணிப்பாளர்களாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில், பள்ளிகளுக்கு செல்லமுடியாமல், பல்வேறு சிரமம் ஏற்பட்டது. எனவே நடப்பாண்டு, 15 கிலோ மீட்டருக்குள் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், உடல்நிலையில் பின்தங்கிய முதுநிலை ஆசிரியர்களுக்கு, தேர்வுப்பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,’’ என்று முருகன் தெரிவித்துள்ளார். 

Tags : General Examination Selection Appointment ,teachers ,CEO ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...