×

உயர் கோபுர மின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் வைகோ நேரில் சந்தித்து ஆதரவு

பள்ளிபாளையம், பிப்.13: உயர் கோபுர மின்திட்டத்திற்கு எதிராக நேற்று விவசாயிகள் மலைப்பாளையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நேரில் சந்தித்து வைகோ ஆதரவு தெரிவித்து பேசினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பக்கமுள்ள மலைப்பாளையத்தில் விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் கொண்டு செல்ல நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகி படைவீடு பெருமாள் தலைமையில் ஐந்துபனையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அவர்களுக்கு, நேரில் சென்று திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்தார். அப்போது, அவர் பேசியதாவது:விவசாயிகளை பாதிக்கும் அனைத்து செயல்களையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது. கடலுக்கு அடியில் 1500 கிலோ வாட் மின்சாரத்தை 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு கொண்டு செல்வதாக பிரதமர் அறிவிக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளை பாதிக்கும் வகையில் மின்கோபுரம் அமைப்பதை தவிர்த்து, பூமிக்கடியில் கொண்டு செல்ல மறுப்பது ஏன். விவசாயிகளின் கதறல் ஆட்சியாளர்களின் காதில் ஏறுவதில்லை. அரசு துறையில் யாருக்கேனும் பாதிப்பு எனில் அந்த துறை தொடர்பானவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு பிரச்னை வந்தால் அவனுக்காக போராட நாதியில்லை. உங்கள் கோரிக்கை நியாயமானது. ஆனால், இந்த நாட்டில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது. வெள்ளைக்காரன் ஆட்சியை விட மோசமாக உள்ளது. நில உரிமையாளர்களை மிரட்டி உண்ணாவிரதம் இருக்க கூடாது என்னும் கொடுமை இங்குதான் நடக்கிறது. தடைகளை தகர்த்து இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாய குடும்பத்து பெண்களை கையெடுத்து கும்பிடுகிறேன்.

நியாயமான உங்கள் கோரிக்கை நிறைவேற என்னாலான உதவிகளை செய்வேன். இவ்வாறு வைகோ பேசினார்.முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் விவசாயி ஒருவர், தனது நிலத்தை மீட்டுத்தரும்படி கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன், மதிமுக நிர்வாகிகள் டைகர் சிவம், குமாரபாளையம் விஸ்வநாதன், பள்ளிபாளையம் திமுக ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் முத்துபாண்டி, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : waiter ,
× RELATED பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட 2 பேர் கைது