×

ராசிபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், பிப்.13: அகில இந்தியா பார்கவுன்சில் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இந்தியா முழுவதும் வழக்கறி ஞர்கள் நேற்று நீதிமன்ற பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி, ராசிபுரத்தில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார்.  அப்போது, அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் சேம்பர், கட்டிட வசதி, இருக்கை வசதி, தரமான நூலகம், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் பணி துவங்கிய முதல் 5 ஆண்டுக்கு மாதம் ₹10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். இதற்காக ஆண்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ₹5ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பார் கவுன்சில், பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தது. இதனை செய்து கொடுப்பதாக பிரதமரும் ஒப்புக்கொண்டார். ஆனால், 5 ஆண்டாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்தில் வக்கீல்கள் சங்க பொறுப்பாளர்கள் செல்வகுமார், சுந்தரம், ரமேஷ்குமார், கார்த்திகேயன், கோபி, ராஜ்குமார், சந்திரசேகர் உள்பட 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : lawyers ,Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்