×

மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் இடிந்து விழும் நிலையில் வாய்க்கால் பாலம் அச்சத்துடன் கடக்கும் பொதுமக்கள்

மண்ணச்சநல்லூர், பிப்.13:   மண்ணச்சநல்லூர் அருகே உள்ள துடையூரில் இருந்து திருப்பைஞ்சீலீ செல்லும் சாலையில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை எந்த சீரமைப்பும் செய்யப்படவில்லை.  தற்போது  பாலம் மிக பலவீனமாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை தவிர விளைநிலங்களில் வாழை, கரும்பு, நெல், உளுந்து ஆகிய தானியங்கள் நான்கு சக்கர வாகனத்தில்தான் கொண்டு வர வேண்டும். மேலும் நூறு நாள் வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனத்திலும் இந்த பாலம் வழியாகத்தான் சென்று வரவேண்டும்.
  இது குறித்து அப்பகுதி விவசாயி சின்னையா கூறுகையில், கடந்த ஆண்டு முக்கொம்பு வடக்குபுறத்தில் உள்ள பாலம் உடைந்துவிட்டது. ஆனால், இதுவரை அந்த பாலத்தை சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் புள்ளம்பாடி வாய்க்கால் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தற்போது இருபுறங்களில் உள்ள கைப்பிடி சுவர் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. எனவே இந்த பாலம் உடைந்தால் விவசாயி மட்டுமல்லாமல் இந்த பாலத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் 8 கி.மீ. சுற்றித்தான் செல்ல வேண்டும் என்றார்.
  இதுபற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பலமுறை மனு அளித்தும் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புள்ளம்பாடி பாலம் சீரமைக்கும் பணியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,dudder ,Mannachanallur ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...