×

பகலில் வகுப்பறை, இரவில் ஓய்வறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனி விடுதி கட்டித்தர வலியுறுத்தல்

சின்னசேலம், பிப். 13: கல்வராயன்மலையில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டுமென்றால், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காவது தனி விடுதி கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்வராயன்மலையில் கொட்டபுத்தூர், இந்நாடு, மூலக்காடு ஆகிய இடங்களில் அரசு  பழங்குடியின உண்டு உறைவிட உயர்நிலை பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். மணியார்பாளையத்திலும் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுமார் 40 மாணவர்கள் 11, 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். கல்வராயன்மலையில் உள்ள பழங்குடியின பள்ளிகளில் கோமுகி அணை, வெள்ளிமலை பள்ளிகளும் அடங்கும். இதில் கோமுகி அணை அரசு மேல்நிலைப்பள்ளி மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு உயர்நிலை, மேல்நிலை மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்களுக்கு தனி விடுதி உள்ளது. அதேபோல வெள்ளிமலையில் ஏகலைவா மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் 10, 11, 12ம் வகுப்பு படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி விடுதி கட்டிடம் உள்ளது.படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை தனியாகவும், விடுதி கட்டிடம் தனியாகவும் இருந்தால்தான் தயக்கம், சோர்வு இல்லாமல் படிக்க முடியும். நூறு சதவீத தேர்ச்சியையும் பெற முடியும். ஆனால் கொட்டபுத்தூர், இந்நாடு, மணியார்பாளையம் உள்ளிட்ட பழங்குடியின உயர்நிலை பள்ளிகளில் போதிய வகுப்பறை கட்டிடங்களும் இல்லை. தனி விடுதி வசதியும் இல்லை. பகலில் வகுப்பு நடக்கும் அதே இடத்திலேயே, இரவில் படுத்து உறங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு புத்துணர்ச்சி இல்லை. பழங்குடியின நலத்துறை நிர்வாகம் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என உத்தரவிடுகிறது. ஆனால் மாணவர்களுக்கு அதற்கேற்ற வசதிகளை செய்து தருவதில்லை. எனவே, கல்வராயன்மலையில் உள்ள கோமுகி அணை, வெள்ளிமலை பள்ளிகளில் மாணவர்களுக்கு தனி விடுதி கட்டிடம் உள்ளதை போலவே, கொட்டபுத்தூர், இந்நாடு, மணியார்பாளையம் ஆகிய பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காவது தனி விடுதி கட்டிடம் கட்டி தர வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : classrooms ,
× RELATED காவலர்களுக்கு எஸ்பி அறிவுறுத்தல்...