மயிலாடும்பாறை-மல்லபுரம் இடையே ஆபத்தை உணராமல் மலைச்சாலை பயணம்

வருசநாடு, பிப். 13: மயிலாடும்பாறை-மல்லபுரம் மலைச்சாலையில் ஆபத்தை உணராமல் வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்வதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு அருகே உள்ள மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைச் சாலை திட்டம் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் மயிலாடும்பாறை, வருசநாடு, கடமலைக்குண்டு போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஆபத்தான பயணத்தை உணராமல் வாகனங்களின் பின்னால் உள்ள ஏணி மற்றும் படிகளில் தொங்கியவாறும், மேல் பகுதியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.இதுகுறித்து மூலக்கடை பகுதியைச் சேர்ந்த செல்வம் கூறுகையில், ஒவ்வொரு நாளும் வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன்பின் இந்த சாலை செப்பனிடும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதுகுறித்து தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கனவே இந்த சாலையை சீர் செய்வதற்கு ஆய்வுகள் நடந்து முடிந்துள்ளது. தேனி மாவட்ட எல்லை வரை தார் சாலை பணிகள் நெடுஞ்சாலைத் துறை மூலம் முடிந்ததுவிட்டது. மேலும் வனத்துறைக்கு சொந்தமான மலைப் பகுதியில் மட்டும் சுமார் நான்கு கிலோ மீட்டர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது நிதி பற்றாக்குறையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிதி வந்தவுடன் இந்த சாலை பணிகள் விரைவில் நடைபெற வாய்ப்பாக இருக்கும் என்றனர்.

Related Stories: