×

குப்பை, கழிவுநீர் தேங்கி கிடக்கிறது செயல்படாத நகராட்சி; நாறுகிறது பழநி தொற்றுநோய் அபாயத்தில் மக்கள்

பழநி, பிப்.13: பழநி நகரில் சாக்கடை தூர்வாரப்படாமல், குப்பைகள் அள்ளப்படாமல், கொசுக்கள் அதிகரித்திருப்பதால் நோய் அபாயம் உண்டாகி உள்ளது.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். இதனால் பழநி நகருக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கும். இந்நகரில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 1.20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், செயல்படாத நகராட்சியால் அடிப்படை வசதிகள் நடைபெறாத சூழ்நிலை உள்ளது.
பழநி நகரில் குப்பைகள் ஆங்காங்கே மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதுதொடர்பாக பலமுறை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கும்போது, நாளிதழில் வெளியான புகைப்படம் உள்ள இடத்தை மட்டும் சுத்தம் செய்து போட்டோ எடுத்து நகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்து ஏமாற்றி விடுவதாக கூறப்படுகிறது. சாக்கடைகள் பல நாட்களாக பல இடங்களில் தூர்வாரப்படவே இல்லை. இதனால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடும் சூழ்நிலை உண்டாகி உள்ளது.மேலும், குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆனால், கொசு மருந்து அடிக்கப்படுவதே இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் கொசுக்கள் கடித்து பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஏற்கனவே, பழநி நகரம் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு பெயர் பெற்று விளங்கிய நிலையில், தற்போது நிலவும் சுகாதார சீர்கேட்டால் 2வது சுற்றாக மீண்டும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கும் நகராட்சி நிர்வாகத்தை செயல்படுத்த வைக்க வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு