×

களக்காடு அருகே புதர் மண்டி கிடக்கும் கால்வாய்

களக்காடு,பிப்.13:  களக்காடு அருகே கால்வாய் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடப்பதால் கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களக்காடு அருகே உள்ள இறையடிக்கால் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய கூலி தொழிலாளர்கள். மலையடிப்புதூர் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியிலிருந்து இந்த கிராமம் வழியாக இறையடிக்கால்வாய் செல்கிறது. அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு இந்த கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டுள்ளன. மண் திட்டுகளால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டுள்ளதால் குளங்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடை ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கால்வாயில் அடர்ந்துள்ள புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தஞ்சமடைந்துள்ளன. இவை கால்வாய் கரையோரமுள்ள குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். கால்வாயின் கரையில் குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார கேடும் நிலவுகிறது. எனவே புதர் மண்டி கிடக்கும் இறையடிக்கால்வாயை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : field ,
× RELATED அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை...