×

திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கும்பப்பூ பருவத்திற்கு புதிய ரகம் உருவாக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில், பிப். 13: திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கும்பப்பூ பருவத்திற்கு பொன்மணியில் புதிய ரகத்தை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்கத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆராய்ச்சி நிலையம் கடந்த 1976ம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும், விவசாயிகளின் குறைகளை தீர்க்கவும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையம் 36 ஏக்கர் பரப்பளவில் நாகர்கோவில் அருகே அமைந்துள்ளது. தொடக்க காலத்தில் இந்த ஆராய்ச்சி நிலைய வளாகம் விவசாயத் துறையின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 1981ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு இவ்வளாகம் வழங்கப்பட்டது. இவ்வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இதுவரை ஐந்து நெல் ரகங்கள் டிபிஎஸ் எனும் பெயரில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

திருப்பதிசாரம் என்பதன் சுருக்கமே டிபிஎஸ் ஆகும். டிபிஎஸ்-1, டிபிஎஸ்-2, டிபிஎஸ்-3, டிபிஎஸ்-4, டிபிஎஸ்-5. இந்த ரகங்கள் கும்பப்பூ, கன்னிப்பூ பருவத்தில் சாகுபடி செய்ய ஏற்றதாகும். இதில் குமரி மாவட்ட விவசாயிகள் டிபிஎஸ்-3, டிபிஎஸ்-5 ஆகிய ரகங்களை பயன்படுத்தி வருகின்றனர். மற்ற ரகங்களை விவசாயிகள் பயன்படுத்தவில்லை. மேலும் கன்னிப்பூ பருவத்தில் அம்பை 16 என்னும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நெல்ரகத்தை விவசாயிகள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். கும்பப்பூ சாகுபடிக்கு பொன்மணி என்னும் ரகத்தை ஆராய்ச்சி செய்து புதிய ரகமாக உற்பத்தி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயி செண்பசேகர பிள்ளை கூறுகையில், குமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் கட்டி சம்பா, வசன முண்டான், அரிக்கிராவி, கொச்சி சம்பா, அறுவதம் குறுவா, கொட்டாரம் சம்பா, செந்தி, பொன்மணி உள்பட பல ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

ஆனால் இந்த ரகங்கள் சாகுபடி செய்து அறுவடை செய்ய சுமார் 150 நாட்களுக்கு மேல் ஆகும். இதனை கருத்தில் கொண்டு திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையம் குறைந்த நாட்களில் அறுவடை செய்யக்கூடிய 5 ரக நெல்களை உற்பத்தி செய்துள்ளது. இதன் சாகுபடி முதல் அறுவடை காலம் சுமார் 115 நாள் முதல் 120 நாட்கள் வரை என குறைந்தது. டிபிஎஸ் ரகங்களில் தற்போது 3, 5 ரகங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற ரகங்களை போதிய விளைச்சல் இல்லாத காரணத்தால் விவசாயிகள் பயன்படுத்த வில்லை. கன்னிப்பூ பருவத்தில் விவசாயிகள் அம்பை 16 ரகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  கும்பப்பூ சாகுபடியின் போது பொன்மணி ரகத்தை பயன்படுத்தி வந்தனர். பொன்மணி ரகத்திற்கு சாகுபடி தொடங்கி அறுவடை காலத்திற்கு 155 நாட்கள் தேவை. இதனால் மக்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்த்து, டிபிஎஸ் ரகங்களை பயன்படுத்த தொடங்கினர்.

அம்பை 16, பொன்மணியில் கிடைத்த அளவு நெல், டிபிஎஸ் ரகத்தில் கிடைப்பது இல்லை. டிபிஎஸ் ரகத்தில் 100 கிலோ நெல்லில் இருந்து 55 கிலோ அரிசி கிடைக்கும். ஆனால் அம்பை 16, பொன்மணிரகத்தில் 100 கிலோ நெல்லில் 68 கிலோ அரிசி கிடைக்கும். திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையம் கும்பப்பூ சாகுபடிக்கு ஏற்ற பொன்மணி நெல்லில் இருந்து ஒரு புதிய ரகத்தை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அப்படி என்றால், கன்னிப்பூ பருவத்தில் அம்பை 16ம், கும்பப்பூ பருவத்தில் பொன்மணியில் புதிய ரகத்தையும் விவசாயிகள் பயன்படுத்த வசதியாக இருக்கும் என்றார்.

திருப்பதிசார நெல் ரகங்கள் திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 5 ரக நெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* டிபிஎஸ் 1: கட்டசம்பா, கன்னிப்பூ பருவத்தில் பயிரிட ஏற்றவை. 110-118 நாட்களில் அறுவடை செய்யலாம். சிவப்பு குண்டு அரிசி.
* டிபிஎஸ் 2: 130-135 கன்னிப்பூ பருவத்தில் பயிரிட ஏற்றவை. 130-135 நாட்களில் அறுவடை செய்யலாம். குண்டு வெள்ளை அரிசி.
* டிபிஎஸ் 3: 135-140 கன்னிப்பூ பருவத்தில் பயிரிட ஏற்றவை. 135-140 நாட்களில் அறுவடை செய்யலாம். குண்டு வெள்ளை அரிசி.
* டிபிஎஸ் 4: 85-90 கும்பப்பூ, கன்னிப்பூ பருவதில் நேரடி நெல் விதைப்பு செய்யலாம். 85-90 நாட்களில் அறுவடை செய்யலாம்.
* டிபிஎஸ் 5: கன்னிப்பூ, கும்பப்பூ பருவத்திலும் பயிரிட ஏற்றவை. 118 நாட்களில் அறுவடை செய்யலாம். சன்னரகம், ஹெக்டருக்கு 6100 கிலோ நெல் கிடைக்கும்.

Tags : race ,season ,paddy research center ,Kumboo ,Tiruchirappallam ,
× RELATED மாட்டு வண்டி எல்கை பந்தயம்