×

திருவண்ணாமலை அருகே பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது மருத்துவக் குழுவினர் அதிரடி நடவடிக்கை

திருவண்ணாமலை, பிப்.13: பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டரை, மருத்துவக் குழுவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை அடுத்த கோவூர் கிராமத்தில் போலி டாக்டர் கிளினிக் நடத்தி வருவதாகவும், சட்ட விரோத கருக்கலைப்புக்கு உதவியாக இருப்பதாகவும் கலெக்டர் கந்தசாமிக்கு தொலைபேசி மூலம் புகார் கிடைத்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் டி.பாண்டியன் தலைமையில், மருந்து ஆய்வாளர் சங்கர், மருத்துவ இணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பு உதவியாளர் ரகுபதி உள்ளிட்டோர் நேற்று கோவூர் கிராமத்தில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கிளினிக் நடந்து வந்தது தெரிந்தது. தொடர்ந்து, அங்கு சோதனை செய்து, கிளினிக் நடத்திய ஷாஜகான்(47) என்பவரிடம் விசாரணை செய்தனர். அவர் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும், பிளஸ் 2 வரை மட்டுமே படித்திருப்பதும் தெரியவந்தது.

மருந்து கடைகளில் வேலை செய்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, கிளினிக் நடத்தியதும், ஆங்கிலமுறை சிகிச்சை அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத கருக்கலைப்புக்கு வரும் பெண்களை, வெளியூர்களில் உள்ள போலி டாக்டர்களிடம் பரிந்துரை செய்து அனுப்புவதாகவும் தெரிவித்தார். எனவே, திருவண்ணாமலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட போலி டாக்டர் ஆனந்திக்கும், இவருக்கும் சட்ட விரோத கருகலைப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், போலி டாக்டர் ஷாஜகான்(47) என்பவரை, கலசபாக்கம் ேபாலீசார் கைது செய்தனர்.


Tags : doctor ,Thiruvannamalai ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...