×

திருத்தணி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு மண்ணெண்ணெய் கேனுடன் திரண்ட மக்கள்

திருத்தணி, பிப். 13:  திருத்தணி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வீடுகளை இடித்தால் தீக்குளிப்போம் என கூறினர். இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். திருத்தணி அடுத்த அமிர்தாபுரத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 16 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.  திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் கிரண் மேற்பார்வையில் திருத்தணி வனச்சரகர் பாஸ்கர், வனவர் சுந்தர், காப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர், அமிர்தாபுரத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்து, நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என 16 குடும்பத்தினருக்கும் எச்சரிக்ைக நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை என தெரிகிறது.

இதையடுத்து தாசில்தார் செங்கலா, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், விஏஓக்கள் முகமது யாசர், அராபத், அருணாச்சலம், இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசாருடன் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். இதையறிந்த 16 குடும்பத்தினரும், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கேனுடன் வனச்சரக அலுவலகத்துக்கு செல்லும் சாலைக்கு வந்தனர். சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
நாங்கள் வீடு கட்டியுள்ள நிலம், ‘ மலை புறம்போக்கு நிலம். எனவே, நாங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம். இதையும் மீறி வீடுகளை காலி செய்தால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்போம்  என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், உங்கள் பிரச்னைக்கு இன்னும் 2 நாட்களில் நில அளவீடு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.  இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : homes ,Tiruttani ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை