×

துணைக்கோள் நகரத்துக்கு நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு 150 அடி கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்

திருவள்ளூர், பிப். 13: சென்னை அருகே திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்க, போலீஸ் பாதுகாப்புடன் நிலம் கையகப்படுத்தி எல்லைக்கல் நடும் பணியில், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில், 1,500 ஏக்கரில் துணை நகரம் அமைக்க, வீட்டுவசதி வாரியம் 1996ல் திட்டமிட்டது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக, இத்திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதில், குறிப்பிட்ட சில பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்த, உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மீண்டும் கடந்த 2011ம் ஆண்டு செப்.7ம் தேதி சட்டசபையில், 110வது விதியின்கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.2,160 கோடி செலவில், 311.05 ஏக்கர் பரப்பளவில், செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம் மற்றும் வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய ‘’திருமழிசை துணைக்கோள் நகரம்’’ அமைக்கப்படும்.

இந்த நகரத்தில் அனைத்து வசதிகளுடன் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வழங்கப்படும்’’ என்றார்.இதற்கும் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றனர்.  ஆனாலும், சில விவசாயிகளிடம் பெறப்பட்ட, 45 ஏக்கர் நிலத்தில் மட்டும், வீட்டுவசதி வாரிய அலுவலர்கள் தலைமையில், சர்வேயர்கள் யஸ்வின்தாஸ், வெற்றிவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளந்து, எல்லைக்கல் நடும் பணியை கடந்த 9ம் தேதி துவக்கினர். நேற்று பர்வதராஜபுரம் பகுதியில் நில அளவீடு நடந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியை சேர்ந்த விவசாயி செல்வகுமார்(38) என்பவர் திடீரென 150 அடி உயர மின் கோபுரத்தின் மீது ஏறி, துணைக்கோள் நகரம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், ‘’போலீசார் திரும்பிச் சென்றால் இறங்குவதாக’’ செல்வகுமார் கூறினார். இதையடுத்து அங்கிருந்து போலீசார் சிறிது தூரம் சென்றதும் விவசாயி செல்வகுமார் கீழே இறங்கினார். இதனால், அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!