×

சூளகிரி பகுதியில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

சூளகிரி, பிப்.12:  சூளகிரி பகுதியில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. அதே வேளையில் காலை மற்றும் மாலை வேளையில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் நேற்று காலை முதலே வெயில் வாட்டியெடுத்தது. நண்பகல் வேளையில் வெயில் கொளுத்தியதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இந்நிலையில், சூளகிரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென வானத்தில் கரிய மேகக்கூட்டம் திரண்டது. பின்னர், தூறல் மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் இந்த மழை நீடித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், அதற்கு கட்டியம் கூறும் வகையில் சூளகிரி பகுதியில் திடீரென மழை பெய்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த மழையால் விவசாயிகள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சிறிது நேரமே பெய்த இந்த மழையால் விவசாயத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. சுமார் 20 நிமிடம் மட்டுமே பெய்த இந்த மழையானது சூட்டை கிளப்பி விட்டு சென்றுள்ளது. இதனால், பல்வேறு உடல் உபாதைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரமாவது நன்கு மழை பெய்திருந்தால் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றனர்.

Tags : area ,Suluggery ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது