×

திருவாரூர் கருவூல அலுவலகத்தில் கணினி திருட்டு, பைக்கிற்கு தீ வைப்பு அரசு அலுவலர் கைது

திருவாரூர். பிப். 12: திருவாரூர் கலெக்டர் அதுவலகத்தின் வலது பக்கத்தில் மாவட்ட கருவூல அலுவலகமும் இடதுபக்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கான பாதுகாப்பு அறையும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த இரண்டு பகுதிகளுக்கும் பகலில் துப்பாக்கியுடன் கூடிய 2 போலீசார் இரவில் 2 போலீசார் என நாளொன்றுக்கு 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட கருவூல அலுவலகம் உட்பட உள்ளே 3 தளங்களிலும் இயங்கி வரும் பல்வேறு அலுவலகங்களுக்கும் ஒரே வளாகத்திற்குள் 10க்கும் மேற்பட்ட இரவு பாதுகாவலர்களும் பணியில் இருந்து வருகின்றனர். அதன்படி கடந்த 10ம் தேதி இரவு மாவட்ட கருவூலத்தில் இரவு பாதுகாவலராக சேகர் (45) என்பவரும் கலெக்டர் அலுவகத்தின் இரவு பாதுகாவலராக ராஜேந்திரன் (50) என்பவரும் பணியில் இருந்தனர்.  இவர்களை தவிர ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த பெண் போலீசார் அஞ்சலி (25) மற்றும் முத்துலட்சுமி (24) ஆகியோர் மாவட்ட கருவூல அலுவலகத்தின் பாதுகாப்பு பணியிலும், கனகாம்பாள் (30)மற்றும் கவிதா (25) ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கான பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரவு 2 மணி அளவில் மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வந்த 2 பேர்   தாங்கள் இருவரும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் என்றும் எங்களுக்கு முக்கியமான பணிகளை முடிக்க வேண்டி இருப்பதால் நாங்கள் உள்ளே செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிய போலீசார் அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். உள்ளே சென்ற அந்த 2 பேரில் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்த நிலையில் அங்கே மின்னணு  வாக்கு பதிவு இயந்திரம் அறையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலெக்டர் அலுவலகத்தின் இரவு பாதுகாவலர் ராஜேந்திரன் பைக்கினை தீ வைத்து கொளுத்திவிட்டு  மாவட்ட கருவூலத்தில் இருந்த கணினியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார்.
இதனையடுத்து பைக் எரிவதை கண்ட ராஜேந்திரன் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு தகவலை போலீசாரிடம் தெரிவிக்கவே அதன் பின்னர் தான் போலீசார் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டனர். மேலும் அதன் பின்னரே மாவட்ட கருவூலத்தில் கணினி திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட கருவூல அலுவலர் லலிதாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் திருவாரூர் தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோப்ப நாய்கள் மூலம் கொள்ளையரை தேடி வந்தனர். இந்நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவினை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் வந்த 2 பேரில் ஒருவர் வருவாய்துறையை சேர்ந்த கண்காணிப்பாளர் என்றும் மற்றொருவர் பேரிடர் மேலாண்மை பிரிவில் உதவியாளராக பணியாற்றி வரும் பூபதி (38) என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரிடமும் நடத்திய விசாரணையில் மேற்படி வருவாய் துறையின் கண்காணிப்பாளர் அலுவலக அவசர வேலையாக வந்தது உண்மை என்று தெரியவந்தது.  மேலும் பூபதியிடம் நடைபெற்ற விசாரணையில் அவருக்கும், கலெக்டர் அலுவலக இரவு பாதுகாவலர் ராஜேந்திரனுக்கும் இருந்து வந்த முன்விரோதம் காரணமாக ராஜேந்திரனின் பைக்கினை கொளுத்திய தாகவும், இதனை திசைதிருப்ப மாவட்ட கருவூலத்தின் கணினியை திருடி சென்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நேற்று அவரை கைது செய்த தாலுகா போலீசார் அவரிடமிருந்த கணினியையும் பறிமுதல் செய்தனர். திருவாருர் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி  கடந்த 2 நாட்களாக மாநிலத்தையே அதிர வைத்த இந்த சம்பவம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் பொது மக்களிடமும்,  கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் இருந்து வந்த பதட்டம் தணிந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் விளக்கம்
நள்ளிரவில் அலுவலகத்திற்குள் ஊழியர்கள் வருவது குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாமகேஸ்வரியிடம் கேட்டபோது, வருவாய் துறையை சேர்ந்த ஊழியர்கள்  24 மணி நேரமும் பணி என்ற நிலையில் உள்ளனர். இந்நிலையில் கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்று முன்தினம் (10ம் தேதி) முதல் பயிற்சி வகுப்பிற்கு செல்ல வேண்டிய நிலையில் வருவாய் துறை தொடர்பாக நீதிமன்றத்தில்  இன்று (நேற்று 11ம்தேதி) தாக்கல் செய்ய வேண்டிய கோப்பு ஒன்றில் கலெக்டர் கையெழுத்திடும் நிலை இருந்ததால் அதனை தயார் செய்வதற்காக கண்காணிப்பாளர் ராஜேஸ் தனது பணிக்காக அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஆனால் அவருக்கு ஒரு சில உதவிகளுக்காக வந்திருந்த பூபதி தனது முன்விரோதம் காரணமாக விரோத செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு தொடர்பாக எப்.ஐ.ஆர் எங்களுக்கு கிடைக்கபெற்றவுடன் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். 

Tags : Fire department employee ,burglary ,Tiruvarur Treasury ,
× RELATED ரூ.2000 திருடியதாக சந்தேகம்; சிறுவர்களை...