×

தஞ்சை திலகர் திடலில் அடிப்படை வசதிகள் இல்லாத மாலைநேர காய்கறி அங்காடி

தஞ்சை, பிப். 12: தஞ்சை திலகர் திடலில் உள்ள மாலை நேர காய்கறி அங்காடியில் மின்வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திலகர்திடல். இந்த திலகர்திடலை ஒட்டி கடந்த 2000ம் ஆண்டு முதல் திலகர்திடல் மாலைநேர காய்கறி அங்காடி என்பது சாலையோர கடைகளாக செயல்பட்டு வந்தது. இவ்வாறு சாலையோரம் செயல்படும் மாலைநேர அங்காடிக்கு உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக போலீசார் கூறி சாலையோர கடைகளை அகற்றி வந்தனர். இதனால் கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் திலகர்திடல் காய்கறி வியாபாரிகள் ஏஐடியூசி சங்கத்தை அனைத்து வியாபாரிகளும் சேர்ந்து அமைத்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு இடையூறாக இருப்பதால் கடைகள் எல்லாவற்றையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.  இங்கு கடை வைத்துள்ள அனைவரும் தஞ்சை திருவையாறு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி தரப்பட்டது. இவ்வாறு கடைகள் எல்லாம் அங்கு சென்றதால் அங்கு நிற்கும் எல்லா பஸ்களும் எதிரே உள்ள தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டது.
இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி திருவையாறு பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள காய்கறி கடைகள் எல்லாவற்றையும் அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. அப்போது நடந்த சுமூகபேச்சுவார்த்தையின் முடிவில் திலகர்திடலை ஒட்டி பழுதடைந்த நிலையில் நகராட்சிக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளதை இடித்து விட்டு அந்த இடத்தில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் இருந்த பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம் இடித்து விட்டு கடைகளை அமைத்துக்கொள்ள அனுமதி கொடுத்தது. இதையடுத்து 114 கடைகள் மேற்கூரைகள் இல்லாமல் அமைத்து வியாபாரம் நடத்தி வந்தனர்.

பின்னர் வியாபாரிகள் கோரிக்கைகளை ஏற்று திலகர்திடல் மாலை நேர காய்கறி அங்காடி என்ற பெயரை மாற்றி அம்மா மாலை நேர காய்கறி அங்காடி என்று அமைத்து 54 கடைகளை கட்டி கொடுத்து 2014ம் ஆண்டு திறப்பு விழா நடந்தது. அன்று முதல் இன்று வரை இந்த கடைகளுக்கு மின்சார வசதி இல்லை. கழிவறை, குடிநீர் என்று எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இந்த மார்க்கெட் இயங்கி வருகிறது.
இது குறித்து சேவையா( அம்மா மாலை நேர காய்கறி அங்காடி வியாபாரிகள் தொழிற்சங்க ஏஐடியூசி தலைவர்) கூறியது: இந்த மாலை நேர அங்காடியில் பெரும்பாலும் பெண்கள் தான் காய்கறிகள் விற்பனை செய்கின்றனர். அப்படி இருக்கும் போது ஒரு கழிவறை வசதி கூட இல்லாமல் கடை உள்ளது. மாலை நேர அங்காடியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. மின் இணைப்பு பெற அனுமதி தரும்படி மாநகராட்சியிடம் பல முறை மனு கொடுத்தும் பயன் இல்லை. இதனால் மின்வசதி இல்லாமல் வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி மின்வசதி செய்துள்ளனர். அடிப்படை வசதி கோரி தொடர்ந்து 4 ஆண்டு காலமாக போராடி வருகிறோம். ஆனால் எவ்வித பயனும் இல்லை என்றார்.
பாலமுருகன்(செயலாளர்): தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் மாலை நேரத்தில் இந்த பகுதியில் வந்து தான் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
 சில்லரை விற்பனை அதிக அளவில் நடைபெறுவதால் இரவு 10 மணி வரை கூட காய்கறிகளை வாங்கிகொள்ளலாம். அப்படி இருக்கும் போது இந்த நவீன காலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் வருத்தம் தருகிறது. தஞ்சை மாவட்டத்தில் திறந்தவெளியில் கழிப்பிடம் பயன்படுத்துவதை தடுக்க தேவையான இடங்களில் கழிவறை கட்டப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தினந்தோறும் ஏராளமான பெண்கள் வரும் இந்த இடத்தில் கழிவறை வசதி இல்லை. இதை விட குடிநீர் வசதி இல்லை. இரவு நேரங்களில் மின்வசதி இல்லை. எனவே இதையெல்லாம் மாற்றி தஞ்சை திலகர் திடல் மாலை நேர காய்கறி அங்காடிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.

Tags : evening store ,Thanjavur Tilak ,
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...