×

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

தரங்கம்பாடி, பிப்.12:  நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்று செயல்படுகிறது. அந்த அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தி டேனிஷ் காலத்து பொருட்கள் அதிகளவில் இடம் பெற செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
டேனீஷ் நேவிகேப்டன் ரோலண்டுகிராப் தரங்கம்பாடியையும் அதன் சுற்றுப்புறத்தையும் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் மன்னரிடம் விலைக்கு வாங்கி கி.பி.1620ல் தரங்கம்பாடி கடற்கரையில் டேனீஷ் கோட்டையையும் அதை சுற்றி மதில் சுவர்களையும் எழுப்பி நுழைவாயிலையும் கட்டினார். அந்த டேனிஷ் கோட்டை தடிமமான சுவர்களால் மிகவும் வலுவாக கட்டப்பட்டது. டேனிஷ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் டேனிஷ் கிழக்கிந்திய வர்த்தக கம்பெனியின் நிர்வாக மையமாக விளங்கி வந்தது. கோட்டையின் மேல் தளத்தில் டேனிஷ் ஆளுநர் டேனிஷ் தளபதி வர்த்தக நிறுவனத்தின் அதிகாரிகள், அலுவலர்கள் தங்கி பணிகளை செய்து வந்தனர். கோட்டையின் கீழ்தளத்தில் பண்டக வைப்பறை, கிடங்கு, பீர் மற்றும் ஒயின் அறை, சமையல் பொருளுக்கான அறை, சமையலறை, கோழி வளர்க்கும் அறை, வீரர்கள் தங்கும் அறைகள், உள்ளிட்ட 11 அறைகளும் சிறைச்சாலையும் உள்ளன. ஆங்கிலேயர் வசம் இருந்த டேனீஷ் கோட்டை இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு வந்தது. அதன் பின் 1978ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டது.  இங்கு அருங்காட்சியகம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் டேனிஷ் காலத்து நாணயங்கள், டேனிஷ் மக்கள் பயன்படுத்திய பொருட்கள், டேனிஷ் வீரர்கள் பயன்படுத்திய போர் கருவிகள் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் டேனீஷ் கோட்டையையும் பார்த்து தரங்கம்பாடி சிறப்பை அறிந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தரங்கம்பாடிக்கு வருகை தந்தனர். அவர்களில் தஞ்சையை சேர்ந்த சாரங்கபாணி, மதுரையை சேர்ந்த உத்திராபதி, பெரம்பூரை சேர்ந்த ராஜகோபால் ஆகியோர் கூறியதாவது,
இந்த அருங்காட்சியத்தில் டேனிஷ் காலத்து அரிய பொருட்கள் இன்னும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைத்து அருங்காட்சியகத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்றனர்.
கோடை விடுமுறை வர இருப்பதால் விடுமுறைக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் தரங்கம்பாடிக்கு வருவார்கள். கோடை விடுமுறைக்கு முன் தொல்லியல்துறை அருங்காட்சியகத்தை விரிவுப்படுத்தி அதிக பொருட்களை பார்வைக்கு வைத்தால் சுற்றுலா பயணிகளை கவர கூடிய இடமாக டேனிஷ் கோட்டை விளங்கும்.

Tags : Terrangambadi Danish Fort Museum ,
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்