×

கம்பம் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்ட தண்ணீர் திறப்பு

உத்தமபாளையம், பிப்.12: தினகரன் செய்தி எதிரொலியாக, கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டா ம்போகத்திற்கு திடீரென நிறுத்தப்பட்ட தண்ணீர், மீண்டும் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, சின்னமனூர், குச்சனூர், சீலையம்பட்டி, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் மூலம் சுமார் 14ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் வருடத்திற்கு இரண்டுபோக நெல்விவசாயம் நடைபெறுகிறது. சென்ற ஆண்டு தென்மேற்கு பருவமழை முழுஅளவில் பெய்தது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்தது.
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. மூலவைகையாற்றில் பெய்த மழையின் காரணமாக வைகை அணை நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், வடகிழக்கு பருவமழை கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்கு கைகொடுக்கவில்லை. எதிர்பார்த்த மழை இல்லை. இதனிடையே இரண்டாம்போகம் நடவு செய்த விவசாயிகளுக்கு பயிர்கள் பால்பிடிக்கும் தருவாயில் உள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக உள்ளது.
இந்த நிலையில் பெரியாறு அணையை நிர்வகிக்ககூடிய உத்தமபாளையம் பொதுப்பணித்துறையினர் 240 நாட்களுக்கு இரண்டுபோகத்திற்கு தண்ணீர் கொடுத்து விட்டதாக கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயத்திற்காக திறக்கப்பட்ட 17
வாய்க்கால்களின் மதகுகளையும் அடைத்த
னர்.
இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொதுப்பணித்துறையின் இந்த செயலுக்கு பல்வேறு விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உத்தமபாளையத்தில் முல்லைப் பெரியாறு அணை நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத்தின் அவசரகூட்டம் தலைவர் தர்வேஷ்மைதீன் தலைமையில் நடந்ததது.
இக்கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருக்கும் வரை விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்கமுடியும். இதேபோல் குடிநீர்க்கும் எந்தபிரச்சனையும் வராது. கடந்தகாலங்களில் மார்ச் 15ம் தேதி வரை விவசாயத்திற்காக தண்ணீர் தரப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் விவாதிக்கப்பட்டன. இப்போது தண்ணீரை அடைத்தால் இரண்டாம்போகம் விளையாத நிலை உருவாகும். இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் கடன்வாங்கி, விதைத்த நெல்பயிர் விளையாமல் போய்விடும் என கூறப்பட்டது. இதேபோல் தண்ணீர் திறக்காவிட்டால் உடனடியாக போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை தினகரன் நாளிதழில் பிப்.10ம் தேதி விரிவாக செய்தியாக வெளியிட்டு இருந்தது.
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்தின் தற்போதைய நிலை பற்றியும், விவசாயிகள் அடைந்துவரும் சிரமங்கள் பற்றியும் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் தேனிக்கு வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விவசாயிகள் சங்க தலைவர் தர்வேஷ்மைதீன், கருங்கட்டான்குளம் விவசாயிகள் சங்கதலைவர் பி.டி.ஆர்.பண்ணை விஜயதியாகராஜன், உள்ளிட்டோர் தலைமையில் விவசாயிகள் நேரில் சென்று சந்தித்தனர்.
இதனை அடுத்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

Tags : Water opening ,Pole Valley ,
× RELATED கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்...