×

அதிகரிக்கும் கொலைகளால் பொதுமக்கள் அச்சம் குமரியில் மீண்டும் தலைதூக்கிய ரவுடியிசம் சாட்டையை சுழற்றுவாரா எஸ்பி?

நாகர்கோவில், பிப். 12: குமரி மாவட்டத்தில் மீண்டும் ரவுடியிசம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதை வேடிக்கை பார்க்காமல் உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டம் ரவுடிகளின் சாம்ராஜ்யமாக திகழ்ந்த காலம் உண்டு. 1990 கால கட்டங்களில் ரவுடிகள் லிங்கம் மற்றும் பிரபு என இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல்களும், கொலைகளும் அரங்கேறியது.  லிங்கம் கோஷ்டியினர் பிரபுவை தீர்த்து கட்டினர். இதனால் பிரபு கோஷ்டி லிங்கத்தை பழிவாங்க திட்டமிட்டது. 1996ல் நாகர்கோவில் சிறைக்குள் புகுந்து லிங்கத்தை கும்பல் வெட்டி கொலை சாய்த்தது. பின்னர் அவரது தலையை பஸ் நிலையத்தில் வீசி விட்டு சென்றனர். நீதிமன்றத்தில் புகுந்து கொலை நடந்த நிகழ்வுகளும் உண்டு. இவ்வாறு பல கொடூர கொலைகள் அரங்கேறிய காலகட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் சிலரும் துடிப்புடன் செயல்பட்டு, ரவுடிகளை வேட்டையாடினர். என்கவுண்டர்களும் அரங்கேறின. இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் சிலர் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். அந்த வகையில் சப் இன்ஸ்பெக்டராக இருந்து டி.எஸ்.பி. வரை பதவி உயர்வு பெற்ற சந்திரபால், பெயர்  இன்னும் குமரி காவல்துறையில் நிலைத்து நிற்கிறது.
அதுபோன்ற துடிப்புமிக்க காவல்துறை அதிகாரிகள் பணியாற்றிய குமரி மாவட்ட காவல்துறை மெல்ல மெல்ல தனது தனித்தன்மையை இழந்து இப்போது செயல் இழந்த நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. குற்ற சம்பவங்களிலும் சரி, ரவுடிகளை கட்டுப்படுத்துவதிலும் சரி திறமைமிக்க இன்ஸ்பெக்டர்களோ, சப் இன்ஸ்பெக்டர்களோ இல்லாமல் போய் விட்டனர். சாதாரண பிரச்னைகளில் கூட குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் காவல்துறை, கொலை வழக்குகளில் எதுவும் செய்ய முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒரு சம்பவம் நடந்து 15 நாட்கள் வரை ஆகியும் கூட குற்றவாளிகளை கைது செய்ய முடியாததால், அவர்கள் நீதிமன்றம் வரை சென்று நிபந்தனை ஜாமீன் வாங்குகிறார்கள். கண்டிப்புடன் நடக்க வேண்டிய காவல்துறை கருணை காட்டுவதில் தவறில்லை. ஆனால் எதையுமே கண்டு கொள்ளாமல் இருப்பது, குறிப்பாக கொடுங் குற்றங்களில் கருணை காட்டுவது காவல்துறை மீதான பயம் குற்றவாளிகளுக்கும், ரவுடிகளுக்கும் இல்லாமல் செய்து விடுகிறது.
இதன் விளைவாக குமரி மாவட்டத்தில் தற்போது ரவுடியிசம் மீண்டும் வளர தொடங்கி விட்டது. சமீபத்தில் தோவாளையில் நடந்த தம்பதி கொலை, பறக்கை அருகே நடந்த கருவூலக அதிகாரி கொலை மற்றும் பல்வேறு கொலை முயற்சி சம்பவங்கள் இதற்கு உதாரணமாக உள்ளன. சிறு சிறு பிரச்னைகளுக்கே சர்வ சாதாரணமாக அரிவாளை கையில் எடுப்பது பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.
பிரபல ரவுடிகளாக வலம் வந்தவர்களின் கூட்டாளிகள் இப்போது மீண்டும் குமரி மாவட்டத்துக்குள் எளிதில் நடமாட தொடங்கி விட்டனர். சிறு சிறு அடிதடி வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்ததன் விளைவாக இப்போது குமரி மாவட்டத்தில் புதுப்புது ரவுடிகள் உருவாகி விட்டனர். ஆங்காங்கே சாலை ஓரங்களிலும், தென்னந்தோப்புகளிலும் அமர்ந்து மது அருந்துபவர்கள் வழியில் வருபவர்களிடம் பணம் கேட்டு, அதை பறிக்கும் நிலை உருவாகி உள்ளது. பல இளைஞர்கள் இப்போது கூலிப்படையினராக மாறி உள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ரவுடி கும்பல்கள் சர்வ சாதாரணமாக வந்து செல்கிறார்கள். இதை கட்டுப்படுத்தி ரவுடிகளை ஒடுக்க வேண்டிய அவசியம் தற்போது காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாத், துளியும் தாமதிக்காமல் உடனடியாக ரவுடிகளின் சாம்ராஜ்யத்தை ஒடுக்கும் வகையில் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த குமரி மாவட்ட மக்களின் வேண்டுகோளாக உள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் மீண்டும் ரவுடிகளின் கோட்டையாக குமரி மாவட்டம் மாறிவிடும் என்ற நிலை உருவாகி உள்ளது.

Tags : SP ,Kuwait ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...