×

அடிப்படை வசதியில்லாததால் வெறிச்சோடிய பாரதிநகர் பூங்கா இரவில் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு

ராமநாதபுரம், பிப்.12:  ராமநாதபுரம் பாரதி நகரில் அமைந்துள்ள அம்மா பூங்கா பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதால், குழந்தைகள் மற்றும் பெற்றோர் பயன்படுத்த முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் பாரதி நகரில் கடந்தாண்டு பொதுமக்கள் வசதிக்காக அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கான சறுக்குகள், ஊஞ்சல்கள், பிளாஸ்டிக் பந்துகள், ஸ்பிரிங் வாத்துகள் உட்பட விளையாட்டு அம்சங்கள் மற்றும் கேன்டீன் வசதிகளுடன் அமைக்கப்பட்டது. நகரின் மையப் பகுதியில் இருந்ததால் மாலை நேரங்களிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் குழந்தைகளும், பெற்றோர்களும் குவிந்தனர். நாளடைவில் பூங்காவில் இருந்த விளையாட்டு கருவிகள் சேதமடைந்ததால் சிறுவர், சிறுமிகள் கூட்டம் குறைய தொடங்கியது. பூங்காவில் இருந்த பெரும்பாலான விளையாட்டு கருவிகள் உடைந்த நிலையில் உள்ளதால் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். பெரும்பாலான விளையாட்டு அம்சங்கள் சேதமடைந்துள்ளன. புல் மற்றும் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகளும் எரிவதில்லை. அதனால் குழந்தைகளும், பெற்றோரும் இருட்டில் அவதிப்படுகின்றனர். ராமநாதபுரம் நகரில் இதுபோன்ற பெரிய அளவிலான பூங்கா எங்கும் அமைக்க வில்லை. இருந்த ஒரு பூங்காவும் பராமரிப்பின்றி கிடப்பதால் நகரில் உள்ள குழந்தைகள், மாணவ, மாணவிகள் பொழுது போக்கு அம்சமின்றி தவிக்கின்றனர். விடுமுறை நேரங்களில் பெற்றோர்களும் குழந்தைகளை இதுபோன்ற பூங்காவிற்கு அழைத்து செல்ல முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவ்வப்போது வந்து கொண்டிருந்த ஒரு சில குழந்தைகளும் தற்போது வருவதில்லை. பூங்கா முழுவதும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் சிறுவர் சிறுமிகள் உள்ளே செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர். இதுதவிர இரவு நேரங்களில் அப்பகுதியை சேர்ந்த பலர் மதுபானங்களை வாங்கி கொண்டு பூங்காவின் உள்ளே சென்று விடுகின்றனர். பூங்காவில் விளையாட்டு சாதனங்களை சரி செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Tags : park ,Bharathi Nagar ,facilities ,
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...