×

ஊட்டல் காப்பு காட்டில் ஒற்றை யானை முகாம் கிராம மக்கள் அச்சம் ஆம்பூர் அருகே

ஆம்பூர், பிப்.12: ஆம்பூர் அருகே ஊட்டல் காப்பு காட்டில் டஸ்கர் எனப்படும் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட ஊட்டல் காப்பு காட்டில் மான், காட்டு பன்றி, மலைபாம்பு, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பகுதியில் உள்ள பெருங்கானாற்றில் தண்ணீர் செல்வதால் நீருக்காக பல்வேறு வன விலங்குகள் வேறு பகுதிகளில் இருந்து இந்த இடத்திற்கு இடம் பெயர்ந்து வந்தன.இந்நிலையில் கோடை துவங்க உள்ள நிலையில் இந்த கானாற்றில் நீர் தேடி வந்த வன விலங்குகள் நீர் வரத்து குறைவாக உள்ளதாக அப்பகுதியை விட்டு வெளியேற துவங்கி உள்ளன.

கடந்த 2017ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் வாழும் கலை அமைப்பினர் இப்பகுதியில் உள்ள ஜம்பு ஊட்டல் பகுதியில் ஆய்வு செய்து நீர் நிலைகளை உருவாக்கினர். இதனால், இப்பகுதியில் தற்போது பல வன விலங்குகள் இந்த நீர்நிலைகளை நாடி வர துவங்கி உள்ளன.இந்நிலையில், பெருங்கானாற்றில் சுற்றி வந்த டஸ்கர் என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் யானை தற்போது இந்த பகுதியில் முகாமிட்டுள்ளது. நேற்று மாலை அவ்வழியாக சென்ற சிலர் யானை நடமாட்டத்தை கண்டு அலறி அடித்தபடி தப்பி வந்துள்ளனர்.இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை பார்த்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், யானை நடமாட்டம் உள்ள அப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags : elephant camp ,jungle backyard forest ,town ,Ambur ,
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...