×

வீரபாண்டி மாரியம்மன் கோயிலில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவில் ரூ.71 லட்சத்திற்கு பொருட்காட்சி ஏலம்

தேனி, பிப். 8: தேனி அருகே வீரபாண்டியில் நடக்க உள்ள சித்திரைத் திருவிழாவில் பொழுதுபோக்கு அம்சங்கள் நடத்திக் கொள்ள நேற்று நடந்த ஏலத்தில் ரூ.71 லட்சத்திற்கு ஏலம் போனது.
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 8 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இவ்விழாவைக் காண தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
கோயில் விழாவிற்கு குடும்பத்துடன் வரும் பக்தர்கள் குதூகலமடைய கோயில் வளாகத்தில் உள்ள மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நடத்தப்படும். இதற்கான டெண்டர் தனியாருக்கு கோயில் நிர்வாகம் அளிக்கும். பொழுதுபோக்கு அம்சங்கள் நடத்த ஏலம் எடுத்தவர்கள் ராட்டினங்கள், மாயாஜால கூத்துக்கள், வணிகக் கடைகள் நடத்துவர்.
இத்தகைய பொழுதுபோக்கு அம்சங்கள் நடத்துவதற்கான ஏலம் நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் தலைமை வகித்தார்.
உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட ஏலதாரர்களில் தங்கத்துரை என்பவர் ரூ.71 லட்சத்திற்கும், தங்கப்பாண்டி என்பவர் முடிகாணிக்கை செலுத்துவதற்கான கட்டண வசூல் காண்டிராக்டை ரூ.6 லட்சத்திற்கும் எடுத்தனர்.



Tags : festival ,Veerapandi Mariamman temple ,
× RELATED வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு