×

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பித்தநீர் குழாயில் கல்அடைப்பு மற்றும் கட்டியை அகற்ற நவீன சிகிச்சை டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில், பிப்.8: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பித்தநீர் குழாயில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் மற்றும் கல் அடைப்பை அகற்ற நவீன சிகிச்சை வசதி அளிக்கப்பட்டு வருவதாக டீன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்  ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பித்தப்பை, குடல் இரைப்பை,  கணயம் போன்ற உறுப்புகளில் உள்ள நோய்களுக்கு சரியான சிகிச்சை இல்லை என்பதால் சித்தா மற்றும் நாட்டு மருந்துகளை மக்கள் எடுக்கின்றனர்.
தற்போது இந்த சிகிச்சைக்காக  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.  கல்லீரல் மற்றும் குடல் நலப்பிரிவில் டாக்டர் பாப்பி ரிஜாய்ஸ் தலைமையில் நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். பித்தநீர் குழாயில் கல், கிருமி தொற்று, சுருக்கம், புற்றுநோய்  போன்ற காரணங்களால் அடைப்பு ஏற்படுகிறது.
இதனால் மஞ்சள்காமாலை, ஊரல்,  வெளிறிய நிறத்தில் மலம் போதல்,  காய்ச்சல், வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் தென்படும்.  இதனால் ஏற்படும் காய்ச்சலுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அளித்தாலும் பலன் இருக்காது. இந்த அடைப்புகளை சரி செய்ய அறுவை இன்றி எண்டோஸ்கோப்பி மூலம் இஆர்சிபி என்ற நவீன சிகிச்சை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் அளிக்கப்படுகிறது.
பித்த  நீர் குழாயில் உள்ள கல்லை அகற்றுதல், புற்றுநோய்  கட்டி இருந்தால்  ஸ்டெண்ட் செலுத்தி பித்தநீரை வெளியேற்றி ஒரே நாளில் பிலிரூபன் அளவை 25  லிருந்து 2க்கு கொண்டு வந்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் ஒரு ஸ்டெண்ட்  ரூ.54 ஆயிரம் உள்பட ஒரு அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் செலவாகும்.
ஆனால்  தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆசாரிபள்ளம்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.  இதுவரை 68 பேர் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர்.
உணவுக்குழாய் இரைப்பையுடன் இணையும் இடத்தில் தமனி மற்றும் சிரைகள் உள்ளன. சிரையின் வேலை கெட்ட ரத்தத்தை பிரிப்பது ஆகும். மது அருந்துபவர்களுக்கு, இந்த சிரையில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டால், ரத்த கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுப்பார்கள்.
இதற்கும்  இதே சிகிச்சை முறையில் ரத்தம் கசியும் நரம்பை கண்டறிந்து, சில மாதங்கள் தொடர் சிகிச்ைசயில் சரி செய்ய முடியும்.  அதன்பின் மது அருந்தாமல் தவிர்த்தால், செல்கள் மீண்டும் உற்பத்தியாகி பழைய  நிலையை அடைய முடியும். எனவே இந்த  சிகிச்சை வசதியை  பாதிக்கப்பட்ட  நோயாளிகள் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, டாக்டர்கள் பாப்பி ரிஜாய்ஸ், எஸ்.ஆர். கண்ணன், ஆறுமுகவேலன், ஜாண்கிறிஸ்டோபர், உஷா உள்பட பலர் உடன் இருந்தனர்.
தனியார் மருத்துவமனையை விட தரமான சிகிச்சை
பேட்டியின்போது, பித்தக்கல் அடைப்பால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த நாகர்கோவிலை சேர்ந்த ஒய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர் ரவீந்திரன்(65) கூறியதாவது: ஒரு வாரமாக கடும் வயிற்றுவலியில் அவதிப்பட்டேன். ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகள் மேற்கொண்டும். அதன் விபரத்தையும் கூறவில்லை. நோயின்தாக்கமும் குறையவில்லை. அப்போது, டீன் ராதாகிருஷ்ணன்தான் மருத்துவகல்லூரிக்கு அழைத்து சிகிச்சை அளித்தார். அறுவை சிகிச்சை இன்றி எண்டோஸ்கோப்பி மூலம் ஒரே நாளில் கல்லை அகற்றி உடல்நலம் பெற்றேன்.
பள்ளியாடியை சேர்ந்த ஜான்ஞானமணி(76), கூறுகையில், எனக்கு ஊரல், வயிற்றுவலி இருந்தது. இங்கு சிசிச்சை பெற்ற பின்னர் நலமாக உள்ளேன் என்றார்.

Tags : Radhakrishnan ,interview ,Aasaripallam Government Medical College Hospital ,
× RELATED சென்னையில் உள்ள வாக்கு எண்ணும்...