×

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பைக்கில் நின்று கொண்டே நூதன பிரசார பயணம்

குமாரபாளையம், பிப்.8: தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி, பைக்கில் நின்று கொண்டே நூதன பிரசார  பயணம் மேற்கொண்டுள்ள ஊட்டி சமூக ஆர்வலருக்கு, குமாரபாளையத்தில் நேற்று  வரவேற்பு அளிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் ஊட்டி கூடலூரை சேர்ந்தவர்  சைபி மேத்யூஸ். இவர், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தி, பைக்கில் நின்று கொண்டே பிரசார  பயணத்தை  மேற்கொண்டுள்ளார். கடந்த 3ம்தேதி ஊட்டியில் பிரசார பயணம்  தொடங்கிய இவர், தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று  பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், மரக்கன்றுகளை வளர்க்கவும் மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். மொத்தம் 33 ஆயிரம் கிலோ  மீட்டர் தூரம் பயணித்து, மார்ச் 7ம்தேதி சென்னையில் பயணத்தை நிறைவு செய்ய  திட்டமிட்டுள்ளார்.   இந்நிலையில், சைபி மேத்யூஸ் ஈரோடு வழியாக நேற்று  குமாரபாளையம் வந்தார். அவருக்கு அரசு பள்ளியின் பசுமைப்படை மற்றும் விடியல்  ஆரம்பம் அமைப்பின் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அவர், குமாரபாளையத்தில் பல்வேறு  பகுதிகளில் பிரசாரம் செய்தார். நேற்று மாலை சேலம்  மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியில்  விடியல் அமைப்பின் தலைவர் பிரகாஷ், பசுமைப்படை அலுவலர் அந்தோணிசாமி,  கோபிராவ், ஆனந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : propaganda trip ,
× RELATED ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும்...