×

மாஜி அஞ்சல் அதிகாரியிடம் ₹6 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு பதிவு

நாமக்கல், பிப்.8: நாமக்கல் அருகே, மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரியிடம் ₹6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் போதுப்பட்டியை சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் அதிகாரி ராமசாமி. இவரது மகன் சக்திகுமார்(24). எம்பிஏ பட்டதாரியான இவர், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வருகிறார். இதனிடையே, நாமக்கல்லை சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம், ராமசாமிக்கு திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்த ஆட்ரின் போஸ்கோ (எ) ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி எட்வின் மெரினாள் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். தனது மகன் சக்திகுமாருக்கு, அரசு துறையில் வேலை வாங்கி தரும்படி ஆட்ரின் போஸ்கோவிடம் ராமசாமி கேட்டுள்ளார். அதற்கு அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, ₹9 லட்சம் கொடுத்தால் அரசு துறையில் வேலை வாங்கி தரமுடியும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ராமசாமி, கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் தவணையாக ₹6 லட்சத்தை, ஆட்ரின் போஸ்கோவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட ஆட்ரின்போஸ்கோ, கடந்த ஒரு மாதமாக எந்தவிதமான பதிலும் சொல்லாமல், மனைவி எட்வின் மெரினாளுடன் தலைமறைவானதாக தெரிகிறது. செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை.  இதையடுத்து ஆட்ரின் போஸ்கோ, ₹6 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக நாமக்கல் போலீசில், நேற்று முன்தினம் ராமசாமி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குலசேகரன், தலைமறைவாக உள்ள ஆட்ரின்போஸ்கோ, அவரது மனைவி எட்வின் மெரினாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : magistrates ,
× RELATED டெல்லியில் கோர்ட் சம்மனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் மனு!!