×

தூண்டில் வளைவு அமைக்ககோரி பெரியதாழையில் மீனவர்கள் உண்ணாவிரதம் இன்று சாலை மறியலில் ஈடுபட முடிவு

சாத்தான்குளம், பிப். 8:தூண்டில் வளைவு அமைக்ககோரி பெரியதாழையில் 4ம் நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இன்று சாலை மறியலில் ஈடுபட  முடிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் அருகே பெரியதாழை. மீனவ கிராமமான இங்கு சுமார் 450 நாட்டுப்படகுகள் மற்றும் பைபர்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுக்கு முன் பெரியதாழையில் சுமார் ரூ.25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. மேற்கு பகுதியில் 800 மீட்டர் தொலைவுக்கும் கிழக்கு பகுதியில் 200 மீட்டர் தொலைவுக்கு தூண்டில் வளைவு க்கப்பட்டது.இதனிடையே கிழக்கு பகுதியில் குறைந்த தூரத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் கடல் அரிப்பால் பாறையில் மோதி படகுகள் சேதமாகி வந்தன. இதையடுத்து விடுபட்ட பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். நிரந்தரமாக இப்பகுதியில் சிறுமீன்பிடி துறைமுகம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி பெரியதாழையில் மீனவர்கள் கடந்த 4ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கை தொடர்பாக தூத்துக்குடி கலெக்டரை சந்தித்து மீனவர்கள் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மீனவர்கள் வேலைநிறுத்தம்  4வது நாளாக நேற்று நீடித்தது. மேலும் அங்குள்ள காணிக்கை மாதா ஆலயம் அருகில் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள  உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர். காலை 10 மணிக்கு துவங்கிய இப்போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது. மேற்கு தெரு கமிட்டி தலைவர் ஜேசு நஸ்சரின் தலைமை வகித்தார்.  கிழக்குத்தெரு கமிட்டி தலைவர் ராஜேஷ், நடுத்தெரு கமிட்டி தலைவர் ரமேஷ், மீனவ கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கனிஸ்டன் மற்றும் பெண்கள் என திரளானோர் பங்கேற்றனர்.   இந்நிலையில்  இன்று (8ம் தேதி) திருச்செந்தூர்- நாகர்கோவில் சாலையில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags : fishermen ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...