×

பிஏபி வாய்க்காலில் தொடரும் தண்ணீர் திருட்டு

பொள்ளாச்சி, பிப்.7:  பொள்ளாச்சி அருகே, கிராமங்கள் வழியாக செல்லும் பிஏபி வாய்க்காலில் தொடரும் தண்ணீர் திருட்டால், கடை மடை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த  திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டல பாசனத்துக்கு ஆண்டுக்க இரண்டு மண்டலம் என்ற விதத்தில், இரண்டு ஆண்டுகளில் 4 மண்டலங்களுக்கும் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 3.75லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் துவக்கத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் நிறைவுபெற்றது.  இதையடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி பகுதியில் பிஏபி வாய்க்கால் மூலம் பெறப்படும் தண்ணீரை நம்பியிருக்கும் கடைமடை விவசாயிகள் பலரும், ஆங்காங்கே நடக்கும் தண்ணீர் திருட்டு காரணமாக தங்கள் பகுதிக்கு தண்ணீர் வராமல் ஏமாற்றமடைகின்றனர். இதில், தொண்டாமுத்தூர், பாரமடையூர், ரெட்டியாரூர் பகுதி வழியாக செல்லும் பிஏபி கால்வாயில் தண்ணீர் திருட்டு என்பது சர்வ சாதாரனமாக நடக்கிறது.பொள்ளாச்சியை அடுத்த சிஞ்சுவாடி கிராமம் வழியாக செல்லும் பிஏபி வாய்க்காலில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள தனியார்கிணறு வரையிலும் குழாய் அமைத்து சிலர் தண்ணீர் திருடியது தெரியவந்தது. இதையறிந்த அப்பகுதி விவசாயிகள், தண்ணீர் திருட்டு குறித்து சில நாட்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். நேற்று முன்தினம், சம்பவ இடத்துக்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தீனதயாளன் திடீர் என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிஏபி வாய்க்காலில் இருந்து கிணற்றுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல பைப் பதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிஏபி கால்வாயிலிருந்து தண்ணீர் திருடியது, சிஞ்சுவாடியை சேர்ந்த தாமோதரன் என்பவர் என  தெரியவந்தது.
  இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில், கோமங்கலம் போலீசார், விவசாயி தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் நேற்று, பிஏபி வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருட பயன்படுத்தப்பட்ட பைப்களை, போலீஸ் உதவியுடன் பொக்லைன் கொண்டு சுமார் 10அடிக்கு தோண்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. வரும் காலங்களில், பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  விவசாயிகள் கூறுகையில்: திருமூர்த்தி அணையிலிருந்து ஒவ்வொரு முறையும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்போதும் பிஏபி பிரதான கல்வாய்  மற்றும் கிளை வாய்க்கால்களில் இருந்து சிலர், தண்ணீர் திருடி வருகின்றனர். இதனால் விளை நிலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் கடைமடை விவசாயிகள் பலர் பாதிக்கப்படுகின்றனர். கடை மடை வரை முறையான அளவு தண்ணீர் சென்று சேர்வதற்கான நடவடிக்கைகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : PAP ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...