அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி வீடு இடித்து அகற்றம் திருவெறும்பூர் அருகே வீட்டுவசதிவாரியதுறை அதிரடி

திருவெறும்பூர், பிப்.7:  திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு மற்றும் கும்பக்குடி பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு வீட்டு வசதிதிட்டங்கள் செயல்படுத்துவதற்கு  திருச்சி மாவட்ட வருவாய்துறை சார்பில் 1981ம் அண்டு  தமிழக அரசு 600 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.
இந்நிலையில் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ஐஎன்ஏ தியாகி வெள்ளைசாமி(97) என்பவர் அரசு தனக்கு கொடுத்த இடம் என்று கூறி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோடு அதில் வீடுகட்டியும், விவசாயம் செய்தும் வந்தார்.
ஆனால் அந்த இடம் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடம் என்று வீட்டு வசதி வாரியத்தினர் வெள்ளைசாமியை காலிசெய்யும்படி கூறினர். ஆனால் அவர் இடத்தை காலிசெய்ய மறுத்து விட்டார். இதுசம்மந்தமாக நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த 2011ம் ஆண்டு வெள்ளைசாமிக்கு எதிராக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடாந்து வெள்ளைசாமி சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் கடந்த 2013ம் ஆண்டு தொடர்ந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி நீதிபதிகள் தள்ளுபடி செய்ததோடு வீட்டுவசதி வாரியத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை அகற்றிக் கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது.   அதன் அடிப்படையில் நேற்று வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தலைமையிலான வீட்டுவசதி வாரிய அலுவலர்கள், நவல்பட்டு போலீசார் உதவியுடன் வெள்ளைசாமியின் கட்டுப்பாட்டில் இருந்த இடத்தையும், அதில் இருந்த கட்டிடங்களையும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.
அப்போது வெள்ளைசாமியும், அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் முன் நின்று தடுக்க முயன்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இருவரையும் போலீசார் அப்பறப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.v
கலெக்டர் அலுவலகத்தில் மனு
வெள்ளைச்சாமி தனது குடும்பத்துடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தார். இதுகுறித்து வெள்ளைச்சாமி குடும்பத்தினர் கூறுகையில், ‘சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கிய நிலத்தில் தான் நாங்கள் வசிக்கிறோம். மற்றவர்களுக்கு வழங்கிய நிலங்களை விற்பனை செய்து விட்டனர். இந்நிலையில், நீதிமன்றத்தின் எந்த உத்தரவும் எங்களுக்கு வராத நிலையில், வீட்டு வசதி வாரியத்தினர் நாங்கள் வசித்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கி எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டனர். கலெக்டர் இல்லாததால், டிஆர்ஓவிடம் மனு அளித்துள்ளோம். கலெக்டர் வந்ததும் எங்களுக்கு உரிய நியாயம் வழங்கும்படி கோருவோம். நியாயம் கிடைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags : Government ,land ,housing bureau ,Thiruvarur ,
× RELATED மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்