×

தமிழக அரசு ‘படிப்படியாக’ மூடும் டாஸ்மாக்கிற்கு கால அளவுதான் என்ன? பணியாளர் சங்கம் கேள்வி

திண்டுக்கல், பிப். 7: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த உள்ளதாக கூறும் அரசு அதற்கான கால அளவை வெளியிட வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு நிருபர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.23 ஆயிரம் வழங்க வேண்டும். பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மூடப்படும் கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு பிறதுறைகளில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பணிக்காலத்தில் மரணமடைந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி செய்ய வேண்டும். ஓய்வூதியத்திட்டம் வகுத்து மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த உள்ளதாக அரசு கூறுகிறது. எனவே இதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி 10 ஆயிரம் பணியாளர்கள் சென்னை சென்று முதல்வரை சந்திக்க உள்ளோம். இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. முதல்வர் எங்களை சந்திக்கும் வரை சென்னையிலே காத்திக்கும் போராட்டம் நடத்துவோம்’’ என்றார். முன்னதாக கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் தனசேகரன் தலைமை வகிக்க, மாநில செயலாளர்கள் மணிகண்டன், இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

Tags : Union ,
× RELATED விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5...