×

2ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

பள்ளிபாளையம், பிப்.7: இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 20 மாதங்களாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனில்லாததால், கடந்த 28ம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா நகர், ஆயக்காட்டூர், காவேரி உள்ளிட்ட பகுதியில் சுமார் 1600 விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், ₹3 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 31ம்தேதி ஜவுளி உற்பத்தியாளர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  

இந்நிலையில், நேற்று 2ம் சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி, சண்முகம், பாலசுப்பிரமணியம், தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், மோகன், வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 6 சதவீதம் வரை கூலியை உயர்த்தி வழங்கவும், போராட்டத்தை தொழிலாளர்கள் வாபஸ் வாங்க வேண்டுமெனவும், வேலை செய்துகொண்டே கூலி உயர்வு குறித்து பேசி தீர்வு காணலாமெனவும்  விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வரும் 16ம் தேதி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், இன்று (7ம் தேதி) காலை தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Tags : negotiations ,phase ,strike ,strikers ,
× RELATED 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான...