×

நாமக்கல் மாவட்டத்தில் 1,956 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

நாமக்கல், பிப்.7: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நேற்று நடந்தது. விழாவில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, 1,956 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையை வழங்கி பேசினார். விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன், மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் தங்கமணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நேற்று ஒரே நாளில், 1,956 பெண்களுக்கு  தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நிகழ்ச்சி நடந்த கூட்ட அரங்குக்கு ஒன்றியம் வாரியாக பெண்கள் வரிசையில் வரவழைக்கப்பட்டு, திருமண நிதிஉதவி மற்றும் தங்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எந்த குளறுபடியும் ஏற்படகூடாது என்பதற்காக அதிகாரிகளே களத்தில் இறங்கி வேலை செய்தனர்.

விழா மேடை அருகில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஒரு மணி நேரத்துக்கு மேலாக நின்று கொண்டு பெண்களை வரிசையாக அனுப்பி வைத்தார். தங்கம் வாங்கி செல்லும் பெண்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியில், ஏடிஎஸ்பி சுஜாதா, டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கணேசன், 5 எஸ்ஐக்கள், 10க்கும் மேற்பட்ட பெண் போலீசார் ஈடுபட்டனர்.அமைச்சர் தங்கமணி அவசரமாக சென்னைக்கு செல்ல வேண்டி இருந்ததால் பள்ளிபாளையம், குமாரபாளையம் ஒன்றியங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் உதவித்தொகையை வழங்கி விட்டு சென்றார்.சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, அவரது தொகுதியான ராசிபுரம் தொகுதியை சேர்ந்தவர்களுக்கும், திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் தொகுதி எம்எல்ஏக்கள், அவரவர் தொகுதியை சேர்ந்தவர்களுக்கும் வழங்கினர். பரமத்திவேலூர் தொகுதியை சேர்ந்த பெண்களுக்கு கலெக்டரும், மாவட்ட சமூக நலத்துறை அலுவலரும் வழங்கினர். அமைச்சர்கள் சென்ற பிறகு அங்கிருந்த உயர் போலீஸ் அதிகாரிகளை காண முடியவில்லை.

Tags : women ,Namakkal district ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...