×

இரு குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு விசாரணை நடத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் ஆர்டிஓவிடம் புகார் மனு

கும்பகோணம், பிப். 7: ஊரை விட்டு இருகுடும்பத்தினர் ஒதுக்கி வைத்தது குறித்து விசாரணை நடத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆர்டிஓவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கும்பகோணம் ஆர்டிஓ வீராச்சாமியிடம் திருவிடைமருதூர் தாலுகா திருமங்கைச்சேரி முழையூர் நத்தன் மேட்டுத்தெருவை சேர்ந்த கலியசாமி (எ) பாண்டியன், அதே பகுதியை சேர்ந்த குமார் ஆகியோர் புகார் மனு அளித்தனர். அதில் நத்தன்மேடு கிராமத்தில் புதிதாக கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு வரியாக வீடுகளுக்கு ரூ.4 ஆயிரம் என ஊர் நாட்டாண்மைகள் முடிவு செய்தனர். நாங்கள் ரூ.2 ஆயிரம் வரி கொடுத்தோம். மீதமுள்ள பணத்தை ஊர் நாட்டாண்மைகள் கேட்டபோது பிறகு தருகிறோம் என்றோம். பின்னர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து கரக உற்சவம் நடந்தது. இதில் கரகத்தை எடுத்து கொண்டு வீதியுலா வந்தபோது எங்களது வீடுகளில் மட்டும் நிற்காமல் மற்ற வீடுகளில் கரகத்தை நிறுத்தி சென்றனர்,

இதுகுறித்து ஊரில் உள்ள கருணாநிதி, முருகானந்தம், சிவக்கொழுந்து, குருசாமி, சுந்தரமூரத்தி மற்றும் ஊர் நாட்டாண்மைகளிடம் கேட்டபோது, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து எங்கள் வீட்டுக்கு ஊர் மக்கள் யாரும் வரக்கூடாது, எங்களது குடும்பத்தினருடன் விவசாய வேலை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது இருதரப்பினரையும் அழைத்து போலீசார் சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி கோயில் நிகழ்ச்சி நடந்தபோது எங்களது வீடுகளில் சுவாமியை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். பின்னர் ஊர் நாட்டாண்மைகள் பஞ்சாயத்து நடந்தது. அதில் எங்களுடன் ஊர் மக்கள் யாரும் வேலை செய்தால் ரூ.7,500 அபராதம் விதிக்கப்படும் என்று முடிவெடுத்தனர்.இதனால் நாங்கள் மனவேதனையில் இருந்து வருகிறோம். எனவே எங்களை ஊரை விட்டு ஒதுக்கிய காரணத்தை கேட்டு விசாரிக்க வேண்டும். எங்களை ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : families ,town ,
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....