×

திருநள்ளாற்றில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம் கோயில் நிர்வாக அதிகாரி தகவல்

காரைக்கால், பிப்.7:  காரைக்கால் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம், பக்தர்கள் எந்தவித கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா தெரிவித்துள்ளார்.காரைக்கால் திருநள்ளாற்றில் உள்ள உலக புகழ்மிக்க தர்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. விழாவில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விழா ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டரும் கோயில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா நேரடியாக செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை வாஸ்துசாந்தி பூஜை சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. விழா குறித்து, மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா கூறியது:தர்பாராண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளதால், விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், விழா தொடர்பாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், டிஜிபி சுந்தரி நந்தா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பலர், விழா ஏற்பாடுகளை நேரில் வந்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி சென்றுள்ளனர்.

அதன்படி, நாளை (7ம்தேதி) முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி 11ம் தேதி நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, காலை 9.10 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது 7ம் தேதி மாலை முதல் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்ய இயலாது என்பதால், யாகச்சாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொள்ளலாம். விழாவிற்கு, வரும் பக்தர்கள் திருநள்ளாறு பகுதியில் உள்ள அனைத்து நிரந்தர, தற்காலிக கழிப்பறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்த பகுதியிலிருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், அவர்கள் மீது  கும்பாபிஷேகம் புனிதநீர் படும் வகையில் ஸ்பிரே முறையில் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் பக்தர்கள் எந்தவித கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம் என்றார்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...