×

3 மாதமாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா 14ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம்

நாகர்கோவில், பிப்.7: 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.குமரி மாவட்ட தொலை தொடர்பு துறையில் 300 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். நாளொன்றுக்கு இவர்களுக்கு ₹460 சம்பளம் ஆகும். மாதத்தில் 26 நாட்கள் வேலை உண்டு. இந்த தொழிலாளர்கள் தான் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், கேபிள் பதிப்பு, டவர் நடுதல், பராமரிப்பு, வாடிக்கையாளர் சேவை மைய பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த பணியாளர்களுக்கு கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாத சம்பளம் இன்னும் வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிர்வாகத்திடம் கேட்ட போது நிதி பற்றாக்குறை இருப்பதால், இப்போதைக்கு சம்பளம் வழங்க முடியாது என கூறி உள்ளனர். இதை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்ககோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நேற்று குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ், தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க அகில இந்திய உதவி பொது செயலாளர் பழனிசாமி, மாநில அமைப்பு செயலாளர் அனில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் இந்திரா, மாவட்ட செயலாளர் ராஜூ, தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் ஜெயபால், எஸ்.ராமச்சந்திரன், மனோகர் ஜஸ்டஸ், லட்சுமண பெருமாள், விஜயன், செல்வராஜன், அச்சுதானந்தன், ஆறுமுகம் உள்பட பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த தர்ணா போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பிப்.14ம் தேதிக்குள் சம்பளம் வழங்காவிட்டால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் கூறினர்.

Tags : BSNL ,Nagercoil Danny ,contract workers ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு