×

தேவதானப்பட்டி பகுதியில் காணாமல் போன தடுப்பணைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தேவதானப்பட்டி, பிப். 3: தேவதானப்பட்டி பகுதியில் உள்ள தடுப்பணைகள் மண்மேவி பயனற்று இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து நூற்றுக்கணக்கான ஓடைகள் தெற்கு நோக்கி ஓடுகிறது. முருகமலையில் மழை பெய்தால், அந்த தண்ணீர் ஓடை வழியாக தேவதானப்பட்டி, தர்மலிங்கபுரம், சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, சமத்துவபுரம், அழகர்நாயக்கன்பட்டி, வேல்நகர், எண்டப்புளிபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விளைநிலங்கள் வழியாக சென்று கண்மாய்களை அடைகிறது. அப்படி வரும் ஒடைகளை மறித்து ஆங்காங்கே ஏராளமான தடுப்பணைகள் கட்டுப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகள் கட்டிய காலங்களில் தண்ணீர் தேங்கி அருகில் உள்ள விளைநிலங்களில் நிலத்தடிநீர் உயர்ந்து விவசாயம் செழிப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் தடுப்பணைகள் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மண் மேவி பயனற்று கிடக்கிறது. முருகமலையில் மழை பெய்தால் தடுப்பணைகளில் தேங்காமல் வீணாக கண்மாய்களுக்கு சென்றடைகிறது. இதனால் தடுப்பனைகள் அருகே உள்ள விளைநிலங்களுக்கு நிலத்தடிநீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுப்பணைகளை தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : disappearances ,area ,Devadanapatti ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி