×

ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதி

நாமக்கல், பிப்.6: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பூஜையின் போது தவறி விழுந்து அர்ச்சகர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து கோயிலில் ஆய்வு செய்த, அறநிலையத்துறை இணை ஆணையர், கோயிலில் அர்ச்சகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  நாமக்கல்  ஆஞ்சநேயர் கோயிலில், கடந்த 27ம் தேதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு மாலை  அணிவிக்கும்போது அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் 8 அடி உயரத்தில் இருந்து  தவறி விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில்  இந்து சமய அறநிலையத்துறையின் சேலம் மண்டல இணை ஆணையர் வரதராஜன் தலைமையில்  தொழில்நுட்ப குழுவினர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பாதுகாப்பு அம்சங்கள்  குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது அர்ச்சகர் வெங்கடேசன் நின்று பணியாற்றிய 8  அடி உயரத்தில் உள்ள மரப்பலகையை பார்வையிட்டனர். தொடர்ந்து  அர்ச்சகர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க முடியுமா என்ற கோணத்திலும்  ஆய்வுசெய்தனர். ஆனால், கோயில் உள் பிரகாரத்தில் லிப்ட் அமைத்தால் சுவாமிக்கு  அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் விழும்போது இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு  என்ற முடிவுக்கு வந்தனர்.
தொடர்ந்து அர்ச்சகர்கள் நின்று பணி செய்யும்  பலகையின் அகலத்தையும், நீளத்தையும் அதிகரிக்கவும், பலகையின் முன்புறம் இரும்பு கைப்பிடி அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பாதுகாப்பு அம்சங்கள்  தொடர்பான பணிகள் செய்து முடிக்கும் வரை, ஆஞ்சநேயர் சுவாமியின் சிலைக்கு  அதிகமாக பூ மாலைகள் அணிவிக்க கூடாது. பக்தர்கள் தரும் பூ மாலைகள்  பெரும்பாலும் சுவாமியின் பாதத்தில் வைக்க வேண்டும். மேலும், வெண்ணை காப்பு  அலங்காரம் முடிந்தவுடன், அதனை சுத்தமாக அகற்றிட வேண்டும். குறிப்பாக  அர்ச்சகர்கள் நின்று பணி செய்யும் பலகையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்  என்று அர்ச்சகர்களுக்கு அறிவுறுரை வழங்கி உள்ளனர்.

Tags : priests ,Anjaneya ,
× RELATED பள்ளிப்பட்டில் சேதமடைந்த மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை