×

நாமக்கல் தாசில்தார், விஏஓக்கள் இடையே நீடிக்கும் பனிப்போர்

நாமக்கல், பிப்.6: பெண் விஏஓக்கு மெமோ அளிப்பு மற்றும் தாலுகா அலுவலகத்தில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், நாமக்கல் தாசில்தாருக்கும், விஏஓக்களுக்கும் இடையே பனிப்போர் வெடித்துள்ளது.
நாமக்கல் தாசில்தாராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார்(47). இவர், கடந்த 3ம் தேதி ஆவல்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது, விஏஓ மலர்விழி அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு தாசில்தார் மெமோ அளித்தார். இதற்கு மலர்விழி உரிய விளக்கம் அளிக்கவில்லை. தாசில்தாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடந்த 31ம் தேதி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த 10 மரங்களை தாசில்தார் செந்தில்குமார் அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்துவிட்டதாக விஏஓக்கள் திடீர் குற்றம் சாட்டினர். பின்னர், டிஆர்ஓ பழனிசாமியை சந்தித்து புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று மாலை இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் 20 விஏஓக்கள், தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து பழனிசாமி கூறுகையில், ஒரு ஞாயிற்றுக்கிழமை தாலுகா அலுவலகத்தில் உள்ள 10 மரங்களை தாசில்தார் அனுமதியின்றி வெட்டிவிட்டார்.  இதனால், தாலுகா அலுவலகம் பசுமை இழந்து காணப்படுகிறது. ஆவல்நாய்க்கன்பட்டி விஏஓ நேரில் விளக்கம் அளிப்பதாக கூறியும், அதை தாசில்தார் ஏற்கவில்லை என்றார். சப்கலெக்டர் விளக்கம் : இதுகுறித்து நாமக்கல் சப்கலெக்டர் கிராந்திகுமார்பதி கூறுகையில், தாசில்தார் ஆய்வுக்கு சென்றபோது, ஆவல்நாய்க்கன்பட்டி விஏஓ., அவர் பணிபுரியும் கிராமத்தில் இல்லை. இதற்கு தாசில்தார் அளித்த மெமோவுக்கு விஏஓ இதுவரை எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை. சங்கத்தினருடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். தாலுகா அலுவலகத்தில் மரங்கள் வெட்டப்பட்டபோது, விஏஓக்கள் புகார் அளிக்காமல், தற்போது தாசில்தார் மீது வாய்மொழியாக புகார் கூறி வருகிறார்கள்.

தாசில்தார் அலுவலக வளாகத்தில் எத்தனை மரங்கள் இருந்தது. எத்தனை மரங்கள் வெட்டப்பட்டது. எதற்கு வெட்டப்பட்டது என்பதெல்லாம் விசாரணை நடத்தினால்தான் தெரியும். மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்படவில்லை. தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கலெக்டருக்குத்தான் உள்ளது. விஏஓக்கள் சங்கத்தினர் கலெக்டரிம் புகார் அளித்தால், அவரது உத்தரவுப்படி நான் விசாரித்து, புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பேன் என்றார்.  சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் முன், நாமக்கல் தாசில்தாரை கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் வட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆன்ந்த் உட்பட 36 கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags : Namakkal Tahsildar ,Cold War ,VAOS ,
× RELATED கீழ்வேளூர் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..!!