×

நல்லிபாளையத்தில் சாலையோர வீடுகள் முன் தடுப்பு அமைக்க வேண்டும்

நாமக்கல், பிப். 6: நாமக்கல் நகர் நல்லிபாளையம் பகுதில் சாலை ஓரத்தில் உள்ள வீடுகளுக்கு முன்பு, தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல்லிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலை ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் கேரளா மாநிலம் வரை செல்ல முடியும். இருவழிப் பாதையான இந்த சாலை குறுகலாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்து பலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இந்த சாலையை அகலப்படுத்தி, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, திருச்செங்கோடு சாலை கடந்த ஆண்டு 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த பணிக்காக, நல்லிபாளையம் பகுதியில் பல்வேறு குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் ஒரு பகுதி மாவட்ட நிர்வாகத்தால் கையப்படுத்தப்பட்டது.

தற்போது, சாலையும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளும் சம அளவில் உள்ளன. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரும் மக்கள், சாலையில் வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில், குடியிருப்புகளுக்கு முன்பு இரும்பு கம்பி தடுப்பு வேலியும், எச்சரிக்கை பலகையும் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, நெடுஞ்சாலை துறை உரிய கவனம் செலுத்தி, நல்லிபாளையம் பகுதியில் குடியிருப்புகள் முன்பு இரும்பு கம்பி தடுப்பு வேலி அமைத்து, விபத்து அபாயத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED புகையிலை பொருட்கள் விற்ற 2 பேக்கரிக்கு சீல்