×

முறையாக பராமரிக்காமல் விட்டதால் கழிவுநீர் கலந்து மாசடைந்து வரும் நாவலூர் ஏரி

திருப்போரூர், பிப்.6: முறையாக பராமரிக்காமல் விட்டதால், கழிவுநீர் கலந்து நாவலூர் ஏரி மாசடைந்து வருகிறது. இதனால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்போரூர் அருகே சென்னை புறநகர் பகுதியான நாவலூரில்  தாழம்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பழண்டியம்மன் கோயிலை ஒட்டி பெரிய ஏரி உள்ளது.  ஒரு காலத்தில் நாவலூர், விவசாய கிராமமாக இருந்தது. அப்போது சுமார் 800 ஏக்கர்  விவசாய நிலங்கள் இந்த ஏரியின் தண்ணீர் மூலம் பாசன வசதி பெற்றன. தற்போது நகர்ப்புற  வளர்ச்சியின் காரணமாக ஏரியை சுற்றி குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இதனால்,  நாவலூர் கிராமத்தில் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த பெரிய ஏரி விளங்குகிறது. இந்த வேளையில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் இருந்து கழிவுநீர்  லாரிகளில் கொண்டு வந்து, இந்த ஏரியில் விடப்படுகிறது. மேலும், ஏரியை  சுற்றிலும் குடியிருப்புகள் உருவாகியுள்ளதாலும், ஓட்டல், வர்த்தக  நிறுவனங்கள் ஏற்பட்டு உள்ளதாலும் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரும்,  இந்த ஏரியில் கலக்கப்படுகிறது. ஏரி முழுவதும் கழிவுநீர் நிறைந்து  கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், ஏரியை சுற்றியுள்ள வீடுகள்,  கடைகளில் இருந்து வெளியே வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், ஏரியின் தண்ணீரில்   மிதக்கின்றன. மற்றொரு பக்கம் அல்லி, தாமரைச் செடிகள் முழுவதும் படர்ந்து  காணப்படுகின்றன.
இதனால், ஏரி நீர் முழுவதும் சாக்கடை கழிவுநீராக மாறி  வருவதால், நிலத்தடி நீரிலும் மாற்றம் உருவாகி அருகில்  உள்ள வீடுகளில் இருக்கும் கிணறு, போர்வெல் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும்  தண்ணீரின் தன்மையும் மாறிவிட்டது. மேலும், நாவலூர் பகுதியில்  இயக்கப்படும் ஆட்டோ, வேன், லோடு வேன்கள் ஆகியவை இந்த ஏரியிலேயே  கழுவப்படுகின்றன.  இதையொட்டி, தண்ணீரில் வாகனங்களின் ஆயில் கலந்து மீன்கள் செத்து  மடிகின்றன. எனவே, நாவலூர் பெரிய ஏரியை சுற்றிலும்  தடுப்பு  வேலி அமைத்து, சட்ட விரோதமாக கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த  வேண்டும். ஏரியை மீட்டு உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என அப்பகுதி  பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

சிப்காட் நிறுவனமும் முறைகேடு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சிறுசேரி  சிப்காட் பகுதிக்கு தண்ணீர் தேவைப்பட்டதால் நாவலூர் ஏரியில் 2  கிணறுகள் தோண்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. ஏரியின்  தன்மை மாறியதால் சிறுசேரி சிப்காட் நிர்வாகம், இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றது. ஆனால், இதே சிப்காட் நிர்வாகம்  தனது பகுதியில் அமைந்துள்ள மென்பொருள் நிறுவனங்களின் கழிவுநீரையும், இந்த  ஏரியின் ஒரு பக்கத்தில் சட்ட விரோதமாக கலப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags : Nawalur Lake ,
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...