×

அண்ணாநகரில் அடுத்தடுத்து 2 வீடு, கம்பெனியில் 100 சவரன் நகை, ரூ.6 லட்சம் வெள்ளி, ரொக்கம் கொள்ளை: சிசிடிவி காட்சிகளுடன் தப்பிய மர்மகும்பலுக்கு போலீஸ் வலை

சென்னை: அண்ணாநகரில் அடுத்தடுத்து 2 வீடுகள், கம்பெனியின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, ரொக்கம், ரூ.6 லட்சம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு, சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்ற கொள்ளை கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் கிழக்கு, எல்.பிளாக் 21வது தெருவில் வசித்து வருபவர்  சத்தியநாராயணன் (60). இவர், பெரம்பூரில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி (53). உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் தம்பதி வீட்டை பூட்டிவிட்டு ஆந்திரா சென்றனர். இந்நிலையில், இவர்களது வீட்டில் வேலை செய்யும் குப்பம்மா என்பவர் நேற்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச  வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சத்தியநாராயாணனுக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அவர் அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அண்ணா நகர் உதவி கமிஷனர் குணசேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த வீட்டை சோதனையிட்டனர். இதில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களை குடித்து கும்மாளம் அடித்துள்ளனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றுள்ளனர்.

அதே தெருவில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு கருவி விற்பனை செய்யும் நிறுவனத்தின் கதவை உடைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து, அதே பகுதியில் 26வது தெருவில் வசிக்கும் முரளி கிருஷ்ணன் (39) என்பவர் வீட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர்.
அண்ணா நகர் பகுதியில் ஒரே நாளில்  அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த 3 சம்பவங்கள் குறித்து அண்ணாநகர் உதவி கமிஷனர் குணசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மூன்று இடங்களிலும் கதவின் பூட்டுகளை உடைத்து ஒரே மாதிரி கொள்ளை அடித்துள்ளனர். மேலும் போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளையும் எடுத்து சென்று விட்டனர். கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் பதிவான கைரேகைகளை நிபுணர்கள் உதவியுடன் பதிவு செய்து அந்த ரேகைகள் பழைய குற்றவாளிகளுடன் ஒத்துப்போகிறதா என சோதனை செய்து வருறோம், என்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு
கொள்ளை குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அண்ணா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் சரிவர ஈடுபடாமல் இருப்பதே இந்த தொடர் கொள்ளை சம்பவத்திற்கு காரணம். கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்கள் நடந்தால் குற்றவாளிகளை பிடித்து விடலாம் என போலீசார் நினைக்கின்றனர். ஆனால் கொள்ளையர்கள் அதற்கு ஒருபடி மேலே சென்று கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையே தூக்கி சென்றுள்ளனர்,’’ என்றனர்.

Tags : houses ,Annanagar ,jewelery ,escape ,CCTV ,
× RELATED செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு