×

லால்குடி அருகே அடிக்கடி அரங்கேறும் அவலம் காட்டுப்பகுதியில் தொடரும் செயின் பறிப்பு, கொலை சம்பவங்கள்  எல்லை பிரச்னையால் போலீசார் திணறல் புறக்காவல் நிலையம், சிசிடிவி கேமரா அமைக்க வலியுறுத்தல்

லால்குடி, பிப்.6:  லால்குடி தொகுதியில் லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்கள் உள்ளன. திருச்சியிலிருந்து சமயபுரம், இருங்களூர், புறத்தாக்குடி. தச்சன்குறிச்சி, குமுளூர், கண்ணாக்குடி, புஞ்சைசங்கேந்தி வழியாக புள்ளம்பாடி செல்லும் இந்த சாலை முக்கிய வழித்தடம் ஆகும். மேலும் குமுளூர் கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி விடுதலைபுரம், பெருவளப்பூர், சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர்  செல்லவும், சமயபுரம் மாரியம்மன் கோயில் செல்ல வரும் பக்தர்கள் இந்த சாலையைதான் பயன்படுத்தி வந்தனர்.
 சிறுகனூர்-தச்சன்குறிச்சி சாலையை ஒட்டி சுமார் 8 கி.மீ தூரம் இருபுறங்களிலும் வனப்பகுதியாக சூழ்ந்துள்ளது. தச்சன்குறிச்சி,  குமுளூர், புஞ்சை சங்கேந்தி வரை சுமார் 10 கி.மீ தூரம் வரை தரிசு நிலங்களும் முட்புதர்களும், கள்ளி செடிகள் அதிக உயரம் வளர்ந்து காணப்படுவதால் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏதுவான சாலையாக அமைந்துள்ளது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இந்த சாலையில் சிறு, சிறு வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. அதனை தொடர்ந்து இந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் குறைவானதை பயன்படுத்தி வெளியூர்களில் இருந்து வருபவர்கள், பள்ளிகளுக்கு வரும் ஆசிரியைகள் மற்றும் தனியாக வரும் தம்பதிகள், சென்னை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்பவர்களை வழிமறித்து கொள்ளையடிப்பது வழக்கமாக உள்ளது.
குமுளூர்-சங்கேந்தி மற்றும் தச்சன்குறிச்சி சாலைகளில்  வயல்களுக்கு வரும் பெண்களிடம் பகல் நேரங்களில் ஹெல்மெட் அணிந்துகொண்டு தாலிச்செயினை பறித்து செல்வதும் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாக்குடி குமுளூர் காட்டுப்பகுதியில் திருப்பூரை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை கொன்று பாதி எரிந்த நிலையில் வீசி சென்றனர். அதுபோல் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை அதே பகுதியில் வீசி சென்றனர். தச்சன்குறிச்சி-மகிழம்பாடி பகுதியில் ஒரு பெண்ணை கொன்று வனப்பகுதியில் வீசி சென்றனர். மேலும் காதலர்கள், கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருப்பதற்கு இந்த பகுதிகள் வசதியாக இருந்து வந்தது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே சாலையில் ஒரு பெண்ணை வழிமறித்த மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மாணவன் கொலை செய்யப்பட்ட பகுதிக்கு அன்று இரவு கல்லக்குடி மற்றும் சிறுகனூர் போலீசார் வந்தனர். இருவரில் யார் வழக்குப்பதிந்து விசாரிப்பது என்ற மோதலில் விஏஓ தலையிட்டு பிரச்னையை தீர்த்ததால் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சாலையில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் என்றால் சிறுகனூர் காவல் நிலையத்திற்குதான் தகவல் தெரிவிக்க வேண்டும்.  குமுளூர் ஊராட்சி, தச்சன்குறிச்சி ஊராட்சி, கண்ணாக்குடி ஊராட்சி பகுதிகள் லால்குடி காவல் நிலையத்திற்கும் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு மையமாக அமைந்துள்ளது.  இந்த ஊராட்சிகளில் ஏதேனும் ஒன்றில் புறக்காவல் நிலையம் அமைத்தும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பதே  அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக்கிடம் கேட்டபோது, குமுளூர் சாலையில் புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்து அந்த ஊராட்சி செயலரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இடம் ஒதுக்கப்பட்டு கொடுக்கப்பட்டால் உடனடியாக புறக்காவல் நிலையம் அமைத்து சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவன் கொலையில் துப்பு துலங்காத மர்மம்

ுள்ளம்பாடி பகுதியை அடுத்த திண்ணக்குளம் கிராமத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவியை கடந்த மாதம் 16ம் தேதி பொங்கல் விடுமுறை என்பதால் சிறுகனூர் பகுதியில் அமைந்துள்ள கோயில்களுக்கு அழைத்து சென்று மாலை பொழுதில் வீடு திரும்பும் வழியில் குமுளூர்-சங்கேந்தி இடையே காட்டுப் பகுதியில் கள்ளி செடிகளுக்கு மறைவாக நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 பைக்கில் வந்த 4  மர்ம நபர்கள் இருவரின் உரையாடலை கேட்டு அங்கு சென்று அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு தகாத முறையில் நடக்க முயன்றனர். அப்போது மாணவரை கத்தியால் குத்தினர். மாணவி தனது செல்போனில் 108க்கு தகவல் கொடுக்கவே அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பினர். இந்த வழக்கில் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

Tags : flooding ,Lalgudi ,killing ,lapse ,victims ,station ,border problem police ,
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...