×

உளுந்து பயிரில் களை கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு ஆலோசனை

சேதுபாவாசத்திரம், பிப். 6: உளுந்து பயிரில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
உளுந்து சாகுபடியை பொருத்தவரை களைகள் இன்றி இருந்தால் தான் நல்ல மகசூல் எடுக்க முடியும். பயிரின் ஆரம்பகாலத்தில் இருந்தே களைகள் இன்றி இருப்பது அவசியம். உழவு செய்வதற்கு முன்பே அருகம்புல், கோரை போன்ற களைகள் அதிகமிருந்தால் கிளைசெல் என்கிற களைக்கொல்லி 10 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து அத்துடன் அம்மோனியம் சல்பேட் 10 கி சேர்த்து கரைத்து தெளிக்க வேண்டும் 1 வாரம் கழிந்த பின் உழவு செய்து பின்னர் உளுந்து விதைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். விதை விதைத்த 3ம் நாளுக்குள் ஒரு ஏக்கருக்கு பாசலின் 600 மிலி மருந்து அல்லது ஸ்டாம்ப் என்கிற பென்டிமெத்தலின் களைக்கொல்லி மருந்து 800 மிலி 120 லிட்டர் தண்ணீரில் கலந்து களைக்கொல்லிக்கான நாசிலை பொருத்தி பின்னோக்கி தெளிக்க வேண்டும். இதனால் ஆரம்பகால களைகளை கட்டுப்படுத்தப்படும். பின்னர் 15 நாட்கள் கழித்து ஒரு கை களை எடுத்து களைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம். இவை தவிர்த்து பர்சூட் என்ற வியாபார பெயர் கொண்ட இமாஸ்தாபயர் என்ற களைகொல்லியை விதை விதைத்த 16 நாள் முதல் 28 நாள் வரையிலான காலத்தில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இதனால் அகன்ற இலை கொண்ட அத்தனை வகை களைச்செடிகளும் 100 சதவீதம் அழிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு...