×

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் தண்ணீரின்றி வறண்ட கோவக்குளம் நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

கரூர், பிப். 6: நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி கிருஷ்ணராயபுரம் கோவக்குளத்திற்கு தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கஜா புயல் எதிரொலியாக மழை பெய்தது. மாவட்டத்தில் பரவலாக மழைபெய்தும் கூட அளவு மிகவும் குறைவாகவே பதிவாகி வருகிறது. கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மழை அளவு குறைவாகவே இருக்கிறது. அவ்வப்போது பருவமழை பெய்தாலும் கடந்த ஆண்டுகளைப்போல சென்டிமீட்டர் அளவில் மழையில்லை. மிமீ அளவுக்கே மழைப்பொழிவு இருந்தது.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்தில் பாசனக்குளம் உள்ளது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் நீரின்றி வறண்டு வருகிறது. சேங்கல், முனையனூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தால் இந்த குளத்திற்கு நீர்வரும். குளம் நிரம்பினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகளுக்கு நீர்சென்று ஆயிரக்கணக்கான ஏக்கர் பயனடையும். இந்த குளம் நிரம்பினால் மட்டுமே அருகில் உள்ள நிலங்களுக்கு பாசனநீர் கிடைக்கும். கடந்த 5 மாதத்திற்கு முன்னர் காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
எனினும் அந்த நீரை குளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காததால் பயனில்லாமல் போய் விட்டது. 2 லட்சம் கனஅடிக்கு மேல் காவிரியாற்றில் தண்ணீர் வந்தும் எங்களுக்கு பயனில்லை. தற்போது பலத்த மழை இல்லாததால் பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். நதிநீர் இணைப்பு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மழையும் இல்லை. உள்ளூர் நதிகள் இணைப்பு திட்டமும் கிடப்பில் உள்ளது. ஆறுகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே வெள்ளகாலங்களில் காவிரிநீர் வீணாகாமல் தடுக்கப்படும். மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டம் இது.
மாநில அரசிடம் நிதியில்லை என்கின்றனர். மத்திய அரசும் நிதி தராமல் உள்ளது.
எனவே மத்திய அரசிடம் நிதியைப்பெற்று கிடப்பில் கிடக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கையைத்தான் எங்களால் வைக்க முடிகிறது. செய்ய வேண்டியவர்கள் எதையும் செய்யாமல் இருக்கின்றனர் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களை மூடாததால்
குண்டும் குழியுமாக காணப்படும் வெங்கமேடு பொன்நகர் சாலை
கரூர், பிப். 6:குண்டும் குழியுமாக காணப்படும் கரூர் வெங்கமேடு பொன்நகர் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் வேலூர் சாலையில் வெங்கமேடு பகுதி உள்ளது. ஏராளமான தெருக்கள் இந்த பகுதியில் உள்ளன. இதில் பொன் நகர் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
குடிநீர் குழாய் பதிப்பிற்காக பொன்நகர் சாலையில் பள்ளம் தோண்டி பணிகள் முடிக்கப்பட்டாலும் சரிவர பள்ளம் மூடாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகினற்னர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.
எனவே அதிகாரிகள் இந்த பொன்நகர் சாலையை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : implementation ,Krishnarayapuram ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளை