×

மின்விளக்குகள் எரியாததால் கும்மிருட்டாக காட்சியளிக்கும் சேரன்மகாதேவி ரயில் நிலைய சாலை

வீரவநல்லூர், பிப். 6: நெல்லை - செங்கோட்டை வழித்தடத்தில் நெல்லை சந்திப்புக்கு அடுத்தப்படியாக அதிகளவில் பயணிகள் வந்துசெல்லும் ரயில் நிலையமாக சேரன்மகாதேவி ரயில் நிலையம் அமைந்துள்ளது. சேரன்மகாதேவியில் சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட கல்வி அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், ஏஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம், சார்நிலை கருவூலகம், பத்திரப்பதிவு அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகம், தபால் நிலையம், அரசு மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், தொலைபேசி நிலையம், தீயணைப்பு நிலையம், வேளாண்மை துறை அலுவலகம், தோட்டக்கலை துறை அலுவலகம், கூட்டுறவு பணியாளர் சிக்கன நாணய சங்க அலுவலகம், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தனியார் தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளது. இதனால் நாள்தோறும் சேரன்மகாதேவி ரயில் நிலையம் வழியாக ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். இவ்வழித்தடத்தில் தினமும் 10 முதல் 12 ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் 5 ரயில்கள் இயக்கப்படுகிறது. சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் மற்றும் மெயின்ரோட்டிற்கு பயணிகள் செல்ல ஏதுவாக ரயில்வே நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வழிப்பாதையில் மின்கம்பங்கள் இருந்தும் பாதி மின்விளக்குகள் எரியாததால் இப்பகுதி இரவு நேரங்களில் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வரும் பயணிகள் பயத்துடனே சாலையை கடக்கும் அவலநிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் காடுபோல் முட்புதர்கள் காணப்படுவதால் இரவு நேரங்களில் சில விரும்பத்தகாத செயல்களும் நடப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேரன்மகாதேவி ரயில் நிலையம் வெளிப்புறம் கூடுதல் மின்விளக்குகளை பொருத்தி அனைத்து மின்விளக்குகளையும் இரவு முழுவதும் எரியச் செய்ய வேண்டும் என்பது பயணிகளின் வேண்டுகோளாகும்.

Tags : Cheranmakadevi Railway Station Road ,
× RELATED நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில்...