×

மரத்தில் கட்டி வைத்து வடமாநில வாலிபர் அடித்துக்கொலை சடலம் கிணற்றில் வீச்சு; காட்பாடி அருகே பயங்கரம் திருடன் என நினைத்து பொதுமக்கள் ஆத்திரம்

வேலூர், பிப்.6: காட்பாடி அருகே திருடன் என நினைத்து வடமாநில வாலிபரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் வாலிபர் இறந்தார்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கொசவன்புதூர் கிராமத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர், கலாநந்தன்(60) என்பவது வீட்டின் கதவை தட்டினர். இதையடுத்து கலாநந்தன் கதவை திறந்த போது, அந்த கும்பல் கதவை வேகமாக தள்ள முயன்றனர்.
இதில் சுதாரித்த கலாநந்தன் கதவை வேகமாக பூட்டினார். பின்னர் வந்தவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் செல்போன் மூலம் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கலாநந்தன் வீட்டிற்கு அருகே பொதுமக்கள் திரண்டனர். அவர்களை பார்த்தும் அங்கிருந்த கும்பல் தப்பியோடியது.அவர்களை விரட்டி சென்ற கிராம மக்கள் அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேர் தப்பியோடினர். பின்னர் பிடிபட்டவரை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். வலி தாங்க முடியாத அந்த நபர் அலறினார். ஆனால் அவர் இந்தியில் பேசியதால் பொதுமக்களுக்கு புரியவில்லையாம். இதற்கிடையில் கடுமையாக தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இறந்தவரின் உடலை அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பொதுமக்கள் தூக்கி வீசினர்.

இச்சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசாருக்கு ேநற்று அதிகாலை 5 மணிக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா, குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த மதுவிலக்கு ஏடிஎஸ்பி ஆசைத்தம்பி, ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் ஆகியோரும் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தாக்கியதில் இறந்தவரின் பேன்ட் பாக்கெட்டில் அவரது பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. அதில், இறந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த குன்ஜனன் கராபலையா(32) என்பது தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குன்ஜனன் கராபலையா மற்றும் அந்த கும்பல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட வந்தார்களா?அல்லது எதற்காக அதிகாலை நேரத்தில் இப்பகுதியில் சுற்றி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே ஊரை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : tailrace ,northwest ,well ,Katpadi ,
× RELATED வடமேற்கு இந்தியாவில் மே 18-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: வானிலை மையம் தகவல்