×

தை அமாவாசை ரங்கம் அம்மாமண்டபத்தில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

திருச்சி, பிப்.5: தை அமாவாசையையொட்டி ரங்கம் அம்மாமண்டபம், ஓயாமாரி காவிரி ஆற்றில் நேற்று ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மூதாதையர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இப்படி தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தி அடைவதுடன் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
மாதா மாதம் தர்ப்பண சடங்குகளை செய்யாமல் விட்டு விட்டவர்கள், தை அல்லது ஆடி அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்தால் அது 12 மாதங்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கப்பட்டதற்கு ஈடாகும் என்று நம்பப்படுகிறது. அதன்படி நேற்று தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி ரங்கம் அம்மா மண்டபம் காவிரியாறு,  ஒயாமாரி, கருடமண்டபம் படித்துறைகளிலும் நேற்று அதிகாலை முதல் மக்கள் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மக்கள் ஆற்றுக்குள் இறங்கி மணலில் அமர்ந்து சடங்குகள் செய்தனர். அம்மாமண்டபத்தில் கரையோரமாக கழிவுநீர் தண்ணீர் தேங்கி நிற்பதால் கரையில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஆற்றுக்குள் இறங்கி செல்ல முடியாதவர்கள் அந்த தொட்டியில் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தவிர போர் மூலம் ஷவர்களிலும் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்ததால், அர்ச்சகர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை ஒருங்கிணைந்து ஐம்பது, ஐம்பது பேராக அமர வைத்து ஒரே நேரத்தில் அர்ச்சகர்கள் கொடுக்க வைத்தனர்.
தா.பேட்டை: இதேபோல் முசிறி, தொட்டியம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு  பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு திதி  கொடுத்தனர். நேற்று அதிகாலை காவிரி ஆற்றுக்கு வந்த பக்தர்கள் புனிதநீராடி சூரியனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து தாய், தந்தையரை இழந்தவர்கள்  அர்ச்சகர்கள் உதவியோடு இறந்து போன மூதாதையருக்கு பிண்டம் வைத்து நீர்  வார்த்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள விநாயகர்,  அழகநாச்சியம்மன், மாரியம்மன், அங்காளம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் விளக்கேற்றி  வழிபட்டனர். இதனால் காலையில் காவிரி கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக  இருந்தது.

Tags : moon ,
× RELATED மிதுனம்