×

காரைக்கால் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானிய தொகையை உடனே வழங்க வலியுறுத்தி இன்றுமுதல் போராட்டம் நகராட்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் அறிவிப்பு

காரைக்கால், பிப்.5: காரைப்பகுதி உள்ளாட்சிகளுக்கான மானியத்தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, இன்று (5ம் தேதி) முதல் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என, நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
வருவாயை  பல வழிகளில் குறைத்துவிட்டு உள்ளாட்சிகளின் சொந்த வருவாயிலேயே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கூறுவது ஊழியர்களை  ஏமாற்றும் செயலாகும். அரசின் தவறான முடிவால் காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு மாதாமாதம் ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை. கடந்த 2 மாதங்களாக உள்ளாட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி உள்ளாட்சி ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க எதுவாக பொது பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி, உள்ளாட்சித்துறையின்  கணக்கின் கீழ் உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20.12.2018 அன்று காரைக்கால் பகுதி உள்ளாட்சி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், புதுச்சேரி அரசும், உள்ளாட்சித்துறையும்  ஊழியர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால், ஊழியர்களின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி பிப்ரவரி 1 ம் தேதி முதல் நேற்று (4ம்தேதி) மாலை வரை கருப்பு பேட்ஜ் அணிந்து  பணிபுரிந்தனர்.
தொடர்ந்து, இன்று (5ம்தேதி) காலை முதல் 8ம் தேதி வரை நான்கு  நாட்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Tags : Local Government Employees Announcement ,Karaikal Area ,
× RELATED காரைக்கால் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு